முகப்பு
தமிழ்நாடு

மனிதநேயத்திற்கு விடப்பட்ட பெரும் சவால்: இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஸ்டாலின் கண்டனம் 

மனிதநேயத்திற்கு விடப்பட்ட பெரும் சவால் என்று இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:43 AM
பகிர்:

சென்னை: மனிதநேயத்திற்கு விடப்பட்ட பெரும் சவால் என்று இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கிறிஸ்தவ மக்கள் நம்பிக்கைக் கொண்டு கொண்டாடும் ஈஸ்டர் திருநாளில், இலங்கையில் உள்ள தேவாலயங்களில் நடந்த குண்டுவெடிப்புகளும் உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குவது போல இருக்கின்றன. இலங்கைத் தலைநகர் கொழும்பு மற்றும் இலங்கையின் தமிழர் பகுதியான மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக நடந்துள்ள குண்டுவெடிப்புகளால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். 300க்கும் அதிகமானோர் படுகாயத்துடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு நகரிலும் மட்டக்களப்பிலும் குண்டு வெடித்த பகுதிகளில் தமிழர்கள் அதிகம் இருப்பதுடன், அவர்களும் இந்தத் தாக்குதலில் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். வெளிநாட்டினர் உள்பட பலரது உயிரும் பறிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் நாளில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியதாகும். வாழ்வுரிமை இழந்து தவிக்கும் ஈழத்தமிழர்களை மேலும் அச்சுறுத்தும் வகையிலும், மதச்சிறுபான்மையினரின் மனதில் நிரந்தரமான பயத்தை உருவாக்கும் வகையிலும் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் குறித்து இலங்கை அரசு நியாயமான - உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கொடூரத் தாக்குதலின் பின்னணியில் உள்ள மதவெறி - இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் உடனடியாக அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுத்து, தண்டித்திட வேண்டும்.

அண்மையில் நியூசிலாந்து நாடு தொடங்கி உலகின் பல நாடுகளிலும் பெருகிவரும் வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து தாக்கும் போக்கு, மனிதநேயத்திற்கு விடப்பட்ட பெரும் சவாலாகும். மனிதாபிமான சக்திகள் இணைந்து நின்று இதனை முறிடியக்க வேண்டும். இலங்கை தேவாலய குண்டுவெடிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள், பிற இனத்தவர், வெளிநாட்டினர் உள்ளிட்ட அனைவருக்கும் விரைந்து நீதி கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →