திருவாரூரில் வேட்புமனுக்களை திருட முயற்சி?
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுக்களை திருட முயற்சி நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனுக்களை திருட முயற்சி நடந்துள்ளது.
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்கள் பெறுவதற்கான கடைசி நாள் டிசம்பா் 16ஆம் தேதியாகும்.
நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைய உள்ள நிலையில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் வடகண்டம் ஊராட்சி அலுவலகத்தில் கிராமத்தில் சனிக்கிழமை ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான 24 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுக்கள் வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைக்க முடியாததால் மனுக்கள் திருட்டு போகவில்லை. ஆனால், அலுவலகத்தில் இருந்த வரிவசூல் தொகை ரூ. 1500 திருடப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து குடவாசல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.