தமிழ்நாடு

திப்பெடா மலைக்கு சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பயணம்: தமிழக வனத் துறை பாராமுகம்

DIN


தேனி மாவட்டம், குரங்கணி அருகே கொழுக்குமலையில் இருந்து திப்பெடா மலையை நோக்கி பாதுகாப்பற்ற முறையில் ஆபத்தான பயணத்தை சுற்றுலாப் பயணிகள் மேற்கொண்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
       போடி அருகே குரங்கணியில் இருந்து கொழுக்குமலைக்கு சுற்றுலாப் பயணிகள் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்று வந்தனர். இதேபோல், கேரளத்தில் இருந்து சூரியநெல்லி வழியாக கொழுக்குமலைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஜீப்களில் சென்று வந்தனர். சூரியநெல்லி வழியாக கொழுக்குமலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அங்கிருந்து குரங்கணி வழியாக நடைபயணமாக தேனி மாவட்டத்தை வந்தடைவதும் வழக்கம்.
     இந்நிலையில், குரங்கணியிலிருந்து கொழுக்குமலைக்கு மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றவர்கள், அங்கிருந்து திரும்பும்போது கடந்த 2018 மார்ச் 11-ஆம் தேதி ஒத்தை மரம் என்ற பகுதியில் காட்டுத் தீயில் சிக்கினர். இதில், 23 பேர் உயிரிழந்தனர். 
    அதையடுத்து, குரங்கணி-கொழுக்குமலை இடையே மலையேற்றப் பயிற்சிக்குச் செல்ல தமிழக வனத் துறை தடை விதித்தது. ஆனால், கேரள மாநிலம் சூரியநெல்லியிலிருந்து கொழுக்குமலைக்கு சுற்றுலாப் பயணிகள் சகஜமாக சென்று வருகின்றனர். இதற்கு, கேரள சுற்றுலாத் துறை சார்பில் அனுமதி பெற்ற தனியார் ஜீப்களும் இயக்கப்படுகின்றன. 
    திப்பெடா மலை: கொழுக்குமலையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் தமிழக வன எல்லையில் உள்ளது திப்பெடா மலை. இங்கிருந்து, மேகக் கூட்டங்கள் தவழும் மேற்குத் தொடர்ச்சி மலை முகடுகளின் எழில்மிகு காட்சி, சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றையும் கண்டு களிக்கலாம்.
சூரியநெல்லியில் இருந்து கொழுக்குமலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர், தற்போது மேற்குத் தொடர்ச்சி மலை முகடுகளின் எழிலை காண்பதற்காக திப்பெடா மலையை நோக்கிப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
    ஆறாயிரம் அடிக்கும் மேல் உயரமுள்ள செங்குத்தான மலை முகடுகள் வழியாக பாதுகாப்பற்ற முறையில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளை, கேரள சுற்றுலாத் துறை தடுப்பதில்லை. விடுமுறை நாள்களில் ஒரேநேரத்தில் 200-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் திப்பெடா மலைப் பாதையில் இடநெரிசலில் நடந்து செல்கின்றனர். இதனால், மலையிலிருந்து சறுக்கி விழுவதற்கு வாய்ப்பும், மண் மற்றும் பாறை சரிவில் சிக்கும் அபாயமும் உள்ளது.
    எனவே,  தமிழக எல்லையில் உள்ள கொழுக்குமலை-திப்பெடா மலை இடையே சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுப்பதற்கு, வனத் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.     இந்தப் பிரச்னை குறித்து, தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ச. கந்தசாமியிடம் புகார் தெரிவித்துள்ளதாக, கொழுக்குமலை தேயிலை எஸ்டேட் மேலாளர் ஜானி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT