தமிழ்நாடு

விதிமீறல் கட்டட விவகாரம்: கொடைக்கானலில் கடையடைப்பு: சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

DIN


கொடைக்கானலில் பொதுநலச் சங்கம் சார்பில், கடையடைப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டதால், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டனர். 
     கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, நகராட்சி நிர்வாகம் மற்றும் மின் வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், தற்போது 43 கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள 1,415 கட்டடங்கள் மீது மார்ச் 11-ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்யவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
     இதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்தினர் கொடைக்கானல் பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.  ஏற்கெனவே இந்தக் கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தற்போது கட்டடத்தில் குடியிருப்புகள் உள்ளனவா அல்லது வணிகரீதியாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றனவா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். 
    இதனிடையே, கொடைக்கானல் பொதுநலச் சங்கம் சார்பில், விதிமீறி  கட்டப்பட்டுள்ள கட்டடங்களை வரைமுறைப்படுத்தி, பொதுமக்கள் நலன் கருதியும், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதியும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
    இந்த கடையடைப்பால், கொடைக்கானல், நாயுடுபுரம், பெருமாள்மலை, அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலுள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், காட்டேஜ்கள், சிறு கடைகள், தேநீர் கடைகள் ஆகியன மூடப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். 
     இது குறித்து கொடைக்கானல் பொதுநலச் சங்கத்தினர் கூறியது: 
கொடைக்கானலில் தற்போது விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, இவற்றை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளோம். மேலும், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடையடைப்பு அறப் போராட்டம் நடத்தியுள்ளோம். எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், பல்வேறு வகையான போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT