முகப்பு
தமிழ்நாடு

விருதுநகரில் காமராஜர் மணிமண்டபம்: சரத்குமாருக்கு ஸ்டாலின் பாராட்டு 

விருதுநகர் மாவட்டத்தில் திங்களன்று நடைபெறும் காமராஜர் மணிமண்டத் திறப்புவிழாவிற்காக, ச.ம.க தலைவர் சரத்குமாருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:32 AM
பகிர்:

சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் திங்களன்று நடைபெறும் காமராஜர் மணிமண்டத் திறப்புவிழாவிற்காக, ச.ம.க தலைவர் சரத்குமாருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில் நடைபெறும் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெருந்தலைவர் பிறந்த மண்ணில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபம் - இடையறாமல் அவர் ஆற்றிய பொதுப் பணிகளுக்கும், நாட்டின் நலனுக்கும் முன்னேற்றத்திற்கும்  ஆற்றிய தொண்டறத்திற்கும், பொதுமக்களின் உற்ற, நெருக்கமான, நயத்தகு நண்பராக, வழிகாட்டியாக, முதலமைச்சர் பொறுப்பிலிருந்து தொடர்ந்து செய்த தன்னலமற்ற சேவைகளுக்கும், நன்றி பாராட்டுவதாக அமையும் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த சீரிய முயற்சியைத் துவங்கி - வெற்றியடைந்துள்ள சகோதரர் திரு. சரத்குமார் அவர்களுக்கு எனது பாராட்டுதலையும், போற்றுதலையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மணி மண்டபம் -  பெருந்தலைவர் அவர்களின் பொது வாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை ஆகிய நற்பண்புகளையும், தமிழகத்திற்கும், இந்திய முன்னேற்றத்திற்கும் அவர் ஆற்றிய பணிகளையும் - அடுக்கடுக்கான சாதனைகளையும் இளைய தலைமுறையினருக்கு எந்நாளும் நினைவூட்டும் நேர்த்தியான அடையாளமாக விளங்கிடும் என்று இந்த நல்ல நேரத்தில் உவகை கொள்கிறேன்; வாழ்த்துகிறேன்!

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →