தமிழ்நாடு

ஆறு ஆண்டுகளாக ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை: கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு புத்துயிரூட்ட ராமதாஸ் கோரிக்கை 

DIN

சென்னை: ஆறு ஆண்டுகளாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க இயலாத நிலையில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வீட்டு வசதி கிடைப்பதற்கு முக்கிய ஆதாரமாக திகழ்ந்த தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் நிலைமை மிகவும் பரிதாபமானதாக மாறியிருக்கிறது. அந்த சங்கங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக  ஊதியம் வழங்கப்படாத நிலையில், அன்றாட செலவுகளுக்கு கூட நிதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 737 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில்  537 சங்கங்கள், அதாவது 73 விழுக்காடு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக 356 சங்கங்களில் பணியாற்றி வரும் 1014 ஊழியர்களுக்கு, அதிகபட்சம் கடந்த 6 ஆண்டுகளாக  ஊதியம் வழங்கப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கான ஊதிய நிலுவை ரூ.55 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதனால் அவர்களின் குடும்பங்கள் கடுமையான வறுமையில் வாடி வருகின்றன. குழந்தைகளின் கல்வித் தேவைகளைக் கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு பெரிய அளவில் சொந்த முதலீடு இல்லாததாலும், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் திரும்பி வராமல் முடங்கி விட்டதாலும், சங்கங்களின் வருவாய் முற்றிலுமாக குறைந்து விட்டது. இதனால் கூட்டுறவு சங்கங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன.

1948-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி வாரியங்கள் 2007-ஆம் ஆண்டு வரை லாபத்தில் தான் இயங்கின. ஆனால், கடந்த 2007-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தின் போது வீட்டு வசதித் திட்டங்களை செயல்படுத்தும், அதிகாரம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களிடமிருந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றப்பட்டது தான் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் நலிவடைவதற்கு காரணமாகும்.

எனவே, கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள் குழுமை அமைத்து, அதன் மூலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு புத்துயிரூட்டும் திட்டத்தை வகுத்து, உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதற்கு முன்பாக கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT