தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., மறைந்த  ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

DIN

சென்னை: திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., மறைந்த  ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது இறப்புச் சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கைத் தொடர்ந்து எதிர்கொள்வதாகக் கூறி,  அந்த தொகுதியைச் சேர்ந்த போஸ் மற்றும் முத்துராஜ் ஆகியோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தத் தேர்தலில், தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கக் கோரி சரவணன் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது.  இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியின் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதைக் காரணம் காட்டி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.  மற்ற சட்டப் பேரவைத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் தேதிகளை அறிவித்தது. 

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் முன் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை விரைவாக பிறப்பிக்க வேண்டும் எனவும், இந்த வழக்கை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை தள்ளி வைத்துள்ளதாக கூறி முறையீடு செய்தார். 

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், இடைத் தேர்தலை நடத்தக்கூடாது என நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் (மார்ச்.22) தீர்ப்பளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மறைந்த எம்.எல்.ஏ.,  ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் அளித்துள்ள தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மறைந்த எம்.எல்.ஏ.,  ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது. அதே சமயம் தன்னை வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்க கோரிய சரவணனின் மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT