சென்னை ஐஐடியின் சாதனை கண்டுபிடிப்பு 
தமிழ்நாடு

நின்றபடியே செல்லக்கூடியே சக்கர நாற்காலி: சென்னை ஐஐடியின் சாதனை கண்டுபிடிப்பு

இந்தியாவின் முதலாவது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘நின்றபடியே செல்லக்கூடிய சக்கர நாற்காலி’யை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.

DIN

சென்னை: இந்தியாவின் முதலாவது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘நின்றபடியே செல்லக்கூடிய சக்கர நாற்காலி’யை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.

இந்திய தொழில்நுட்பக் கழகமான சென்னை ஐஐடி, பீனிக்ஸ் மருத்துவ சாதனங்கள் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவின் முதலாவது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘நின்றபடியே செல்லக்கூடிய சக்கர நாற்காலி’-யை வெளியிட்டுள்ளது.  அமர்ந்த நிலையில் இருந்து, நின்ற நிலையில் பயணம் செய்யக்கூடிய சக்கர நாற்காலி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள், சுதந்திரமாகவும், பிறரது உதவியின்றி செல்வதற்கு இந்த சக்கர நாற்காலி வகை செய்யும். 

இந்த சக்கர நாற்காலி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் மற்றும் சென்னை ஐஐடி-யின் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், ஊழியர்கள், பேராசிரியர்கள் முன்னிலையில், சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் வெளியிடப்பட்டது. 

‘அரைஸ்’ (Arise) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நவீன சக்கர நாற்காலி, சென்னை ஐஐடி-யின் இயந்திர பொறியியல் துறை பேராசிரியர் சுஜாதா ஸ்ரீனிவாசன் தலைமையிலான குழுவினரால், ஐஐடியில் உள்ள மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் கருவிகள் தயாரிப்புக்கான டிடிகே மையத்தால் வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.  டிடிகே பிரெஸ்டீஜ் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்ட உதவியுடன், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, இந்த சக்கர நாற்காலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த வெல்கம் அறக்கட்டளை ஒத்துழைப்புடன், ‘இந்தியாவில் குறைந்த செலவில் மருத்துவ சேவை’ என்ற திட்டத்தின்மூலம், நின்றபடியே செல்லக்கூடிய இந்த சக்கர நாற்காலி தயாரிப்புக்கான தொழில்நுட்பம், வணிகமயமாக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, பீனிக்ஸ் மருத்துவக் கருவிகள் தயாரிப்பு நிறுவனம், குறைந்த விலையில் இந்த சக்கர நாற்காலியை தயாரித்து விற்பனை செய்யவுள்ளது. 

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களில், தாம் பார்த்த வகையில் இதுபோன்ற நின்றபடியே செல்லக்கூடிய சக்கர நாற்காலியை உலகில் வேறு எங்கும் பார்க்கவில்லை என்றார்.  இதுபோன்ற சிறந்த சக்கர நாற்காலியை உருவாக்கியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், இதனை உருவாக்கிய சென்னை ஐஐடி மற்றும் அதன் பங்குதாரர்களை பாராட்டுவதாக கூறினார்.  இந்த சக்கர நாற்காலி குறைந்த செலவில் கிடைக்கக்கூடியது என்பதோடு, மருத்துவ ரீதியாகவும், பன்முக பலன் அளிக்கக்கூடியது என்று அவர் குறிப்பிட்டார்.

 சென்னை ஐஐடி-யில் உள்ள இந்த ஆராய்ச்சி மையத்தின் பணிகள் தம்மை வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறிய தாவர்சந்த் கெலாட், எதிர்காலத்தில் இதுபோன்ற பணிகளில் ஒத்துழைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.  மத்திய சமூக நீதித்துறை, சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியுதவியுடன், நின்றபடியே செல்லக்கூடிய இந்த சக்கர நாற்காலியை, தேவைப்படுவோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். 
 
தற்போது பயன்பாட்டில் உள்ள அமர்ந்தபடி செல்லக்கூடிய சக்கர நாற்காலியில் நீண்டநேரம் பயணித்தால், ரத்த ஓட்ட குறைபாடு, அழுத்தத்தால் ஏற்படும் புண் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக்குறைபாடுகள் ஏற்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.  அத்தகைய சிரமங்களிலிருந்து விடுபட, இந்த புதிய சக்கர நாற்காலி பயனுள்ளதாக இருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT