தமிழ்நாடு

ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு: தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

DIN

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடனான தொடர்பு குறித்து நாகப்பட்டினம், திருச்சி, கோயம்புத்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 6 இடங்களில் தேசிய புலனாய்வு படை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாக வந்த தகவலையடுத்து கேரள மாநிலம், கொச்சியில் உள்ள தேசியப் புலனாய்வு அமைப்பினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், கோவையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் விசாரணையில் திருச்சி, நாகை, ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் இலங்கை சம்பவத்தில் தொடர்பிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் அந்தப் பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வியாழக்கிழமை அதிகாலை முதல்  சோதனை மேற்கொண்டனர். 
மேலும் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

காயல்பட்டினம்: காயல்பட்டினம், கே.டி.எம். தெருவில் வசித்து வருபவர் ரிபாய்தீன் மகன் அபுல் ஹஸன் சாதுலி (27). கார் ஓட்டுநர். இவரது வீட்டில், கேரள மாநிலம், கொச்சியிலிருந்து என்.ஐ.ஏ. ஆய்வாளர் செந்தில் தலைமையிலான 3 பேர் கொண்ட அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். 
அப்போது, அபுல் ஹஸன் சாதுலி வீட்டில் இல்லை என்றும், சென்னைக்கு வாடகை காரில் பயணிகளை ஏற்றிச் சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. 
வீட்டில் அவரது தாயும் சகோதரரின் மனைவியும் மட்டும் இருந்தனராம். அங்கிருந்து செல்லிடப்பேசியையும், சில ஆவணங்களையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். காயல்பட்டினத்தில் அபுல் ஹஸன் சாதுலியின் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி: இந்த வழக்கில் திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர், ஆசாரி தெருப் பகுதியைச் சேர்ந்த  ரபீக் முகமது மகன் சாகுல் ஹமீது (29) என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது. அவரது வீட்டில் இருந்த அவரது பெற்றோரிடம் கேரளத்தைச் சேர்ந்த துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும், வீட்டில் சோதனை மேற்கொண்டு மடிக்கணினி, ஆவணங்கள், செல்லிடபேசி உள்ளிட்டவற்றை அவர்கள் எடுத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து, ராம்ஜிநகர் போலீஸார் உதவியுடன் சாகுல் ஹமீது பணியாற்றும் பால்பண்ணைக்குச் சென்ற அதிகாரிகள் அவரைப் பிடித்து தனியிடத்தில் வைத்து விசாரிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கோவை: கோவை, உக்கடம், ஜிஎம் நகரைச் சேர்ந்த சமீர் (22), உக்கடம், லாரிபேட்டை அண்ணா நகரைச் சேர்ந்த சவுகர்தீன் (30) ஆகியோரது வீடுகளில் கொச்சியில் இருந்து வந்த என்ஐஏ டிஎஸ்பி சாகுல் ஹமீது தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனையிட்டனர்.
பொறியியல் பட்டதாரியான சமீர் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். 
சென்னையில் வசித்து வந்த சவுகர்தீன், சில மாதங்களாக கோவை, உக்கடம் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார்.  
இந்தச் சோதனையில் இருவரது வீடுகளில் இருந்தும் 2 மடிக்கணினிகள், 2 செல்லிடப்பேசிகள், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி சாலையூரில் உள்ள நூர்முகமது மகன் சிராஜுதின் (22) வீட்டுக்கு அதிகாலை வந்த என்.ஐ.ஏ ஆய்வாளர் சுபீஸ் தலைமையிலான 3 பேர் அங்கிருந்த சிராஜுதினிடம் விசாரணை நடத்தினர். அதன்பின் அவரிடமிருந்து செல்லிடப்பேசியை பறிமுதல் செய்தனர். 

நாகூர்: நாகையை அடுத்த பனங்குடி, சன்னமங்கலம் சேவாபாரதி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் மகன் முஹம்மது அஜ்மல் என்பவரது வீட்டில், தேசியப் புலனாய்வு (என்.ஐ.ஏ.) முகமை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிகாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, நாகூர், மியாத் தெருவில் உள்ள தனது உறவினர் சாதிக் பாட்ஷா வீட்டில் முஹம்மது அஜ்மல் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து. 
என்.ஐ. ஏ. அதிகாரிகள் அங்கு சென்று சோதனை செய்ததுடன், அங்கு தங்கியிருந்த முஹம்மது அஜ்மலிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரிடமிருந்த செல்லிடப்பேசி மற்றும் சிம் கார்டு ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT