முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி அங்காடிகள் திட்டம்: ஆணையாளர் கோ.பிரகாஷ் துவக்கிவைத்தார்

சென்னையில் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி அங்காடிகள் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ. பிரகாஷ் இன்று துவக்கிவைத்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:24 PM
பகிர்:

கரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் 144 தடை ஆணை அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும்
சிரமமின்றி அடிப்படை பொருட்கள் கிடைப்பதில் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இத்தருணத்தில் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று வண்டிகள் மூலம் காய்கள், பழங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்யும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கோடம்பாக்கம் மண்டலம், கோட்டம்-131, கே.கே.நகர், பி.டி ராஜன் சாலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடமாடும் மளிகை மற்றும் காய்கறி விற்பனை அங்காடிகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், இ.ஆ.ப., இன்று துவக்கி வைத்தார்.

பின்னர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஆணையாளர் தெரிவித்ததாவது, கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு அனுமதி பெற்ற தள்ளுவண்டி, சிறுவாகனங்கள் மூலம் நேரடியாக சென்று விற்பனை செய்யும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று 80 நடமாடும் அங்காடிகளை கோடம்பாக்கம் மண்டலத்திலும், 450 நடமாடும் அங்காடி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மற்ற மண்டலங்களிலும் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடமாடும் கடைகள் மேலும் அதிகரிக்கப்படும்.

இந்த நடமாடும் மளிகை கடையில் நான்கு நபர்கள் கொண்ட குடும்பங்களுக்கு 15 நாட்களுக்கு தேவைப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய், மிளகாய், உப்பு மற்றும் இதர மளிகை பொருட்கள் அடங்கிய காம்போ பேக் (Combo pack) ரூ.850/-க்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வெளியில் செல்லுவதை தவிர்க்கலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் ,இ.ஆ.ப., தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் பிரதிநிதிகள், மேற்பார்வை பொறியாளர், மண்டல அலுவலர், செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →