முகப்பு
தமிழ்நாடு

கரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை நகரம் மாறியிருப்பது வேதனையளிக்கிறது: ராமதாஸ்

கரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை நகரம் மாறியிருப்பது வேதனையளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

கரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை நகரம் மாறியிருப்பது வேதனையளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள பகுதிகளில் ஒன்றாக சென்னை மாநகரத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்தியாவின் சுகாதாரத் தலைநகராகவும், மருத்துவச் சுற்றுலா மையமாகவும் அறியப்பட்ட சென்னை நகரம் இப்போது கரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியிருப்பது வேதனையளிக்கிறது. 

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புகளில் நான்கில் ஒரு பங்கு சென்னையில் தான் நிகழ்ந்திருக்கின்றன. சென்னையில் கடந்த 10 நாட்களில் கரோனா வைரஸ் பாதிப்பு இரு மடங்குக்கும் கூடுதலாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் புதிதாக ஏற்படும் தொற்றுகளில் பெரும்பாலானவை சென்னையில் தான் ஏற்படுகின்றன. இதையடுத்து சென்னையில் கரோனா வைரஸ் பரவல் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அறிவித்துள்ள மத்திய அரசு, நிலைமையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காகவும், நிலைமையை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் பல்வேறு மத்திய அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவை அனுப்பி வைத்திருக்கிறது.

சென்னையில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதை உணர்ந்து தான் அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளை தமிழக அரசு மூடியிருக்கிறது. சென்னையிலும், சென்னையின் புறநகர் மாவட்டமான செங்கல்பட்டிலும் நாளை முதல் 4 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் அளிப்பது உள்ளிட்ட பணிகளை அரசு  பார்த்துக் கொள்ளும் நிலையில், கரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு பங்களிக்க வேண்டியது நமது கடமையாகும். அதை உணர்ந்து அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு மட்டுமின்றி, சென்னையில் நிலைமை சீரடையும் வரை ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க மக்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →