தமிழ்நாடு

ஓணம் பண்டிகை: குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

DIN

சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர்கள் பன்வாரிலால் புரோஹித், ஆரிஃப் முகமது கான்,  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து, அவர்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
குடியரசுத் தலைவர்:  ஓணம் பண்டிகையையொட்டிவாழ்த்து தெரிவித்த  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் "ஓணம் பண்டிகை நமது வளமான கலாசார பாரம்பரியத்தின் சின்னமாக திகழ்கிறது. நமது நாட்டில் ஒத்துழைப்பு மற்றும் சகோதரத்துவத்தை இந்தப் பண்டிகை வலுப்படுத்தட்டும்' என்று தெரிவித்தார். 

குடியரசு துணைத் தலைவர்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "ஓணம் பண்டிகையை கொண்டாடும்போது, மகாபலி அரசரின் நேர்மை, கருணை, தன்னலமற்ற குணம், தியாகம் ஆகியவற்றை நினைவுகூர்வோம். கரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு, அனைவரும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி வீட்டில் எளிமையான முறையில் ஓணம் பண்டிகையை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்தார். 

பிரதமர் மோடி: "வேளாண்மையுடன் தொடர்புடைய ஓணம் பண்டிகை இன்று உலகெங்கிலும் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகையாகி உள்ளது. ஓணம் பண்டிகை மீதான ஆர்வம் வெளிநாடுகளுக்கும் சென்று சேர்ந்துள்ளது. அது அமெரிக்காவோ, ஐரோப்பாவோ அல்லது வளைகுடா நாடுகளோ, எங்கு சென்றாலும் ஓணம் பண்டிகையால் ஏற்படும் மகிழ்ச்சியை உணர முடிகிறது. ஓணம் பண்டிகை சர்வதேச விழாவாக உருவெடுத்து வருகிறது' என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாக பிரதமர் அலுவலகம் சார்பில் சுட்டுரையில் பதிவிடப்பட்டது. 

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: மகிழ்ச்சிகரமான ஓணம் பண்டிகையை ஒட்டி, எனது மனமார்ந்த வாழ்த்துகளை தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வசிக்கும் மலையாள மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அறுவடைத் திருநாளைக் குறிக்கும் வகையிலும், மகாபலி மன்னர் மக்களை நேரில் சந்திக்கும் நிகழ்வாகவும் ஓணம் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த அறுவடைத் திருநாளானது, நம்மிடையே உள்ள வேறுபாடுகளை அகற்றி மேம்பாட்டுக்காக ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

இந்த மகிழ்ச்சிகரமான ஓணம் திருநாளில், அன்பினை வெளிப்படுத்தி தேசத்தின் வளர்ச்சிக்கும், செழுமைக்கும் நாம் தொடர்ந்து பணியாற்றுவோம்.

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் : "இந்த ஓணம் பண்டிகையில் அனைத்து குடும்பங்களும் செழிப்படைவதற்கு  வாழ்த்துகிறேன். இது அன்பையும், ஒற்றுமையையும் கொண்டாடும் பண்டிகையாக அமையட்டும்' என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் தெரிவித்தார். 

முதல்வர் பழனிசாமி: திருமால் வாமன அவதாரம் எடுத்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு, முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையிலும் வைத்தார். மகாபலியின் செருக்கினை அடக்கி, அழித்ததோடு, அவர் வேண்டியபடி, ஆண்டுக்கு ஒருமுறை தன் நாட்டு மக்களைக் காண திருமால் அருள்புரிந்தார். அதன்படி, மகாபலி சக்கரவர்த்தி மக்களைக் காண வரும் நாளே திருவோணத் திருநாளாக மலையாள மக்களால் கொண்டாடப்படுகிறது.

சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில், மலையாள மக்களால் ஜாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் திருவோணத் திருநாளில், மக்கள் அனைவரும் அனைத்து நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டும்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்: ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட காணொலியில், "ஓணம் பண்டிகை எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. சமூகத்தில் சமத்துவத்துக்காக போராடுவோருக்கு ஓணம் பண்டிகை நம்பிக்கை தரும் விழாவாகும். கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கான நெறிமுறைகளை பின்பற்றி பண்டிகையை கொண்டாடுவோம்' என்று தெரிவித்தார். தலைவர்கள் வாழ்த்து

ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக ஒருங்கிணைப்பாளர்): திருவோணம் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள். 
மு.க.ஸ்டாலின்: கேரள மக்களின் பண்பாட்டுடனும், உணர்வுடனும் ஒன்றிப்போயிருக்கும் விழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஓணம் திருநாள் சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் எவ்வித வேறுபாடுமின்றி சமூக நல்லிணக்கத்தோடு தமிழகத்தில் வாழ்ந்து வருகிற மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள்.

ராமதாஸ் (பாமக): மகாபலி மன்னன்  மக்களைக் காண வரும் ஓணம் திருநாளைக் கொண்டாடும் இந்த நாளில் இயற்கையை மீட்டு உலகைக் காக்க அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும். 

அன்புமணி (பாமக): ஓணம் திருநாளைப் போலவே எல்லா நாளும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும். 

ஜி.கே.வாசன் (தமாகா): கரோனா காரணமாக, கேரள மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். 
எல்.முருகன் (பாஜக): மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் தங்களது இல்லத்துக்கு வருகிறார் என்ற நம்பிக்கையோடு, அறுசுவை உணவுடன், பூக்கோலமிட்டு மகிழ்ந்து கொண்டாடும் திருநாள் ஓணம் பண்டிகை. மலையாள மொழி பேசும் மக்களுக்கு எனது வாழ்த்துகள்.

டிடிவி தினகரன் (அமமுக): கேரள மக்களின் அறுவடைத் திருநாளான திருவோணம், அந்த மக்களின் பாராம்பரியத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் திருவிழாவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT