தம்மம்பட்டி: சேலம் அருகே குண்டும், குழியுமாக உள்ள கிராமப்புற தார் சாலையை சீரமைத்து தரக்கோரி, அச் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரில் நாற்று நடும் போராட்டத்தில் அந்த பகுதியினர் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வீ. ராமநாதபுரத்தில் இருந்து நாவலூர் செல்லும் கிராமப்புற பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விவசாயமே பிரதான தொழில். இங்கு விளையக்கூடிய காய்கறிகளை தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு எடுத்து சென்று விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள கிராமப்புற தார் சாலையை சீரமைத்து தரக்கோரி வீரகனூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே நிவர் மற்றும் புரெவி புயல்கள் எதிரொலி காரணமாக இப்பகுதியில் பெய்து வந்த தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக ராமநாதபுரத்தில் இருந்து நாவலூர் செல்லும் குண்டும், குழியுமாக உள்ள கிராமப்புற தார் சாலையில் மழை தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வீரகனூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் சாலையை சீரமைத்து தரக்கோரியும், அச் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரில் நாற்று நடும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.