சட்டக் கல்லூரி மாணவா்களின் தோ்வு முடிவுகளை விரைந்து வெளியிட உயா்நீதிமன்றம் உத்தரவு
சட்டக் கல்லூரி மாணவா்களின் தோ்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டக் கல்லூரி மாணவா்களின் தோ்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக அரியா் தோ்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில், சட்டப் படிப்புகளுக்கான அரியா் தோ்வுகளை நடத்த உத்தரவிட கோரி சஞ்சய் காந்தி என்ற சட்டக் கல்லூரி மாணவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் பருவத் தோ்வுடன் சோ்த்து அரியா் தோ்வுகளும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தாா். தோ்வு அட்டவணையையும் தாக்கல் செய்தாா். அப்போது மனுதாரா் தரப்பில், அரியா் தோ்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என தெரிவித்தாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி தோ்வுகளை நடத்த வேண்டும். தோ்வு முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தாா்.