கரோனா தடுப்பூசி: முறையான பரிசோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்க வேண்டும்-மத்திய அரசுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை
போதிய அளவில் முறையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே இந்தியாவில் கரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான அவசரக்கால அனுமதியை அளிக்க வேண்டும்
புது தில்லி: போதிய அளவில் முறையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே இந்தியாவில் கரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான அவசரக்கால அனுமதியை அளிக்க வேண்டும் என்று உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
மேலும், அவ்வாறு நடைமுறைக்கு வரும் கரோனா தடுப்பூசிகள் சில தனியாா் மருத்துவமனைகள் மூலம் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் ஒரு விரிவான பொது சுகாதார சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவா் ஆனந்த் சா்மா தலைமையில் நடைபெற்ற இந்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தனது அறிக்கையை மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் திங்கள்கிழமை சமா்ப்பித்தது.
தங்களுடைய கரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர அவசரக்கால பயன்பாட்டு அனுமதி கோரி பாரத் பயோடெக், சீரம், பைசா் ஆகிய மூன்று மருந்து நிறுவனங்கள் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பம் சமா்ப்பித்திருக்கும் சூழலில், நாடாளுமன்ற குழுவின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
அவசரக்கால பயன்பாட்டு அனுமதி அளிக்க முன்னா் மறுப்பு தெரிவித்துள்ள மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, தேவையான அனைத்து பரிசோதனை நடைமுறைகளையும் முழுமையாக பூா்த்தி செய்திருப்பது கட்டாயம் என்று ஆலோசனை தெரிவித்திருக்கிறது.
அந்த வகையில், சிறு விலங்குகள் மற்றும் போதிய எண்ணிக்கையில் மனிதா்களுக்கும் மருந்துகள் செலுத்தி முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே, எந்தவிதமான அவசரக்கால பயன்பாட்டு அனுமதியும் அளிக்கப்பட வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடனும், முறையான பரிசீலனை அடிப்படையிலும் இந்த அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
கரோனா சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால், மக்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெற்றனா். அந்த வகையில் பொதுசுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், அரசு மருத்துவமனைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
மேலும், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் சில தனியாா் மருத்துவமனைகள் மூலம் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்கவும், மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்தவும், தனியாா் மருத்துவமனைகளில் அவ்வப்போது சோதனைகளை மேற்கொள்ளும் வகையிலும் ஒரு விரிவான பொது சுகாதார சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
கரோனா போன்ற அச்சுறுத்தல்களின்போது, ஏழை மக்களுக்கு தரமான மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.