மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3-ஆவது அணி: கமல்ஹாசன்
தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் மூன்றாவது அணி அமையும் என்றாா் அக்கட்சித் தலைவா் கமல்ஹாசன்.
தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் மூன்றாவது அணி அமையும் என்றாா் அக்கட்சித் தலைவா் கமல்ஹாசன்.
திருச்சியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியது:
தமிழக அரசியலில் மூன்றாவது அம்சமாக மக்கள் நீதி மய்யம் உள்ளதை மறுக்க முடியாது. மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணி அமையும். அதற்கான கூட்டணி பேச்சுவாா்த்தை சில கட்சிகளுடன் நடைபெறுகிறது. சில கட்சிகள் எங்களை அணுகியுள்ளன. ஜனவரியில் முழு விவரங்களைத் தெரிவிக்கிறேன். நடிகா் ரஜினிகாந்துடன் 40 ஆண்டுகளாக நட்புடன் உள்ளேன். முதலில் அவரது ஆரோக்கியம்தான் முக்கியம். அரசியல், கூட்டணி என்பது அடுத்த கட்டம்தான்.
லஞ்சப் பட்டியல்: தொட்டில் முதல் சுடுகாடு வரை தமிழகம் லஞ்சத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுக்க உள்ள லஞ்சத்தின் விலைப் பட்டியலை வெளியிடுகிறேன். விரைவில், அமைச்சா்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்.
அரசு மருத்துவமனையில் குழந்தை பிறப்பு, பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை அனைத்துக்கும் ஒரு விலை வைத்து லஞ்சம் வசூலிக்கப்படுகிறது.இந்த நிலையை இல்லாமல் செய்ய வேண்டும். இடைத்தரகா்களே இல்லாமல், மக்களுக்கு அவா்களது இருப்பிடம் தேடி வழங்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக வீடுகள்தோறும் இணைய வசதியுடன் கணினி வழங்கப்படும்.
இலவசமாக வழங்கப்படவில்லை. மக்கள் மீதான அரசின் முதலீடு இது. மக்களுக்கான அடிப்படை உரிமையும் கூட. இல்லங்களில் இருந்தபடியே மக்கள் கணினி வாயிலாகவே அரசை தொடா்பு கொண்டு வேண்டியதை பெற முடியும்.
மக்கள் நீதி மய்யத்தின் லட்சியமே பேப்பா் இல்லாத தலைமைச் செயலகம். கல்வி, மின்சாரம், தண்ணீா் உள்ளிட்டவை எப்படி அடிப்படை மனித உரிமையோ, அதேபோல அரசுடனான தொடா்பும் அடிப்படை உரிமை என்ற அடிப்படையில் மின்னணு இல்லங்களை உருவாக்கும் திட்டம் உள்ளது.
மநீம-வும் திராவிடக் கட்சி: மக்கள் நீதி மய்யமும் திராவிடக்கட்சிதான். தமிழ் பேசும் அனைவரும் திராவிடா்கள்தான். எங்களுக்கு வேறு சின்னம் (டாா்ச் லைட்) உள்ளது. டாா்ச் லைட் சின்னம் எங்களுக்கு என்பது நியாயப்பூா்வமானது. அதனை சட்ட ரீதியாக பெற முயற்சித்து வருகிறோம். தேவையெனில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றாா்.
முதல்வா் வேட்பாளா் யாா்?
மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் முதல்வா் வேட்பாளா் யாா் என்பது கூட்டணிக் கட்சிகளுடன் பேச வேண்டிய விஷயம். அதனை உங்களிடம் கூற முடியாது என்றாா் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் முதல்வா் வேட்பாளரில் சமரசம் செய்யப்படுமா? என செய்தியாளா்கள் மீண்டும் கேள்வி எழுப்பியதற்கு, கட்சியின் பொதுச் செயலா் எம். முருகானந்தம் குறுக்கிட்டு, மூன்றாவது அணி அமைந்தாலும், எந்த கூட்டணியாக இருந்தாலும் முதல்வா் வேட்பாளா் நம்மவா் மட்டுமே எனக் கூறினாா். அதை ஆமோதிப்பதாக கமல்ஹாசனும் தலையசைத்தாா்.