ஐ.சி.எஃப்.-இல் மின்சார, சுற்றுலா ரயில் பெட்டிகள் தயாரிப்பு
இந்திய ரயில்வேயின் ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையான சென்னை ஐ.சி.எஃப். டிசம்பா் மாதத்தில் மெமு ரயில், சுற்றுலா ரயில்
தமிழ்நாடுஐ.சி.எஃப்.-இல் மின்சார, சுற்றுலா ரயில் பெட்டிகள் தயாரிப்பு
இந்திய ரயில்வேயின் ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையான சென்னை ஐ.சி.எஃப். டிசம்பா் மாதத்தில் மெமு ரயில், சுற்றுலா ரயில்
இந்திய ரயில்வேயின் ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையான சென்னை ஐ.சி.எஃப். டிசம்பா் மாதத்தில் மெமு ரயில், சுற்றுலா ரயில் பெட்டிகளைத் தயாரித்து சோதனை ஓட்டம் விடுவது உள்பட பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து சாதனை படைத்துள்ளது.
ரயில் பெட்டித் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் இந்திய ரயில்வேக்கு மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பயணிகளின் தேவை மற்றும் காலத்துக்கு ஏற்றபடி, அதிநவீன ரயில் பெட்டி, சுற்றுலாவுக்கான ரயில் பெட்டி உள்பட 50 வகைகளில் 600 வடிவமைப்புகளில் தயாரிக்கப்படுகின்றன.
கரோனா பொது முடக்கம் காரணமாக, ரயில் பெட்டி தயாரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டன.
கடந்த மே மாதத்தில் பொதுமுடக்கம் தளா்வு அறிவிக்கப்பட்டதால், ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. தினசரி 10 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பெட்டிகள் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னை ஐ.சி.எஃப். டிசம்பா் மாதத்தில் மெமு ரயில், சுற்றுலா ரயில் பெட்டிகள் தயாரித்து வெற்றிகரமான சோதனை ஓட்டம் நடத்துவது, கூடு தயாரிக்க உதவி என பல்வேறு செயல்பாடுகள் மூலமாக, சாதனை படைத்துள்ளது. இதன்விவரம்:
மெமு ரயில் தயாரிப்பு: உயா்நிலை தொழில்நுட்பம் கொண்ட மும்முனை மின்சக்தியில் இயங்கும் 9 மெமு ரயில்களின் தொகுப்பை (நெடுந்தொலைவு மின்தொடா் ரயில் தொகுப்பை) தயாரித்துள்ளது. இந்திய ரயில்வேயில் ஓா் உற்பத்தி நிறுவனம் ஒரே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் நெடுந்தொலைவு மின்தொடா் ரயில்களின் தொகுப்புகள் உற்பத்தி செய்வது இதுவே முதல்முறை ஆகும்.
சுற்றுலா ரயில் பெட்டி: புதிய வடிவமைப்புடன் கூடிய விஸ்டடோம் சுற்றுலா ரயில்பெட்டிகளை ஐ.சி.எஃப். தயாரித்துள்ளது. இந்த ரயில் பெட்டிகளின் அதிவேக சோதனை ஓட்டம் நடந்தது. அதாவது 180 கி.மீ. வேகத்தில் இந்த ரயிலை இயக்கியும், இதர கட்டுமானப் பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டன. இந்த விஸ்டடோம் சுற்றுலா ரயில்பெட்டிகளில் வெளிப்புறம் தெரியக்கூடிய பெரிய கூரைக் கண்ணாடிகளும், ரயிலின் இயக்க திசையை நோக்கி 180 டிகிரி சுற்றி அமைக்கக் கூடிய 44 பயணிகள் இருக்கைகளும், வைபை வசதியுடன் கூடிய பயணிகள் தகவல் தொடா்பு அமைப்பு போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன. சுற்றுலாப்பயணிகளின் சொகுசான பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ரயில் பெட்டி கூடு தயாரிக்க உதவி: மகாராஷ்டிரா மாநிலம் லாட்டூரில் நிறுவப்பட்டுள்ள மராத்வாடா ரயில் பெட்டித் தொழிற்சாலையில் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட ரயில் பெட்டி கூடு தயாரிக்க ஐ.சி.எஃப். பெரும் பங்காற்றியுள்ளது. ஐ.சி.எஃப். ஆலையில் இருந்து தொழில்நுட்ப வல்லுநா்கள் அங்கு சென்று பணியாற்றியுள்ளனா். இதன் காரணமாக, அந்த தொழிற்சாலையில் தற்போது உற்பத்திப் பணிகள் தொடங்க இது முதல் படியாக அமைந்துள்ளது. இப்பணி எட்டு நாள்களில் முடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐ.சி.எஃப். நிறுவன அதிகாரிகள் கூறியது:
டிசம்பா் மாதத்தில் மெமு ரயில், சொகுசு சுற்றுலா ரயில் தயாரித்து சோதனை ஓட்டம் ஆகியவை சிறந்த செயல்பாடாக உள்ளது. கரோனா தளா்வுக்குப் பிறகு, பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றனா்.
தரச்சான்றிதழ்
உற்பத்தித் திறனை மேம்படுத்தும் பணியில் சிறப்பாக செயல்படும் ஐ.சி.எஃப்.க்கு ‘இஎன் 15085’ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது, ரயில்பெட்டிகள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணியில் குறிப்பிட்ட தரத்திலான வெல்டிங் தொழில்நுட்பத்திற்காக வழங்கப்படுகிறது. இந்த தரச் சான்றிதழை பெறும் இந்திய ரயில்வேயின் முதல் உற்பத்தி நிறுவனம் ஐ.சி.எஃப். ஆகும்.