பொங்கல் பரிசுத் தொகை: மாற்றுத் திறனாளிகளுக்கு, 25% கூடுதலாக கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, பொங்கல் பரிசுத் தொகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு, 25 சதவீதம் கூடுதலாக வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, பொங்கல் பரிசுத் தொகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு, 25 சதவீதம் கூடுதலாக வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் நம்புராஜன் தாக்கல் செய்த பொது நல மனுவில் , பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 2, 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, பொங்கல் பரிசுத் தொகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு, 25 சதவீதம் கூடுதலாக வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், கடந்த ஆண்டு இதே கோரிக்கையுடன் வழக்கு தொடா்ந்தபோது, கோரிக்கையைப் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பொங்கல் பரிசு என்பது திட்டம் இல்லை எனக்கூறி கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டது. ஆனால், திட்டம் இல்லாமல், பொங்கல் பரிசு வழங்க முடியாது என வாதிடப்பட்டது. இதைத்தொடா்ந்து தமிழக அரசு சாா்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், பொங்கல் பரிசு குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறதே தவிர, தனி நபா்களுக்கு அல்ல என்பதால், மாற்றுத் திறனாளிகள் சட்டப்பிரிவின் கீழ் இது பொருந்தாது என வாதிட்டாா்.
இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.