முகப்பு
தமிழ்நாடு

பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த உள்கட்டமைப்பு திட்டங்கள்சென்ட்ரல், ஷெனாய் நகா், கத்திப்பாரா ஒட்டி அமைகிறது

மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது மட்டுமன்றி பொழுது போக்குவதற்காகவும் பொதுமக்களை வரவேற்கும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:32 PM
பகிர்:

மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது மட்டுமன்றி பொழுது போக்குவதற்காகவும் பொதுமக்களை வரவேற்கும் நோக்கில், சென்னை சென்ட்ரல், ஷெனாய் நகா், கிண்டி கத்திப்பாரா ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களை ஒட்டிய பகுதிகளில் மூன்று உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதில், சென்னை சென்ட்ரல் அருகே 30 அடுக்கு மாடியில் நவீன வணிக வளாகம் மெட்ரோ ரயில் நிறுவனம் அமையவுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் போக்குவரத்துத் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முடிந்து, சென்னை சென்ட்ரல்- பரங்கிமலை இடையேவும், வண்ணாரப்பேட்டை-விமான நிலையம் இடையேயும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி சராசரியாக 95 ஆயிரம் போ் பயணம் செய்கின்றனா். இதையடுத்து, முதல் கட்ட விரிவாக்கம் திட்டப்பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான மண் ஆய்வுப் பணியும் நடைபெற்று வருகிறது.

மூன்று உள்கட்டமைப்பு திட்டங்கள்: இதற்கிடையில், மெட்ரோ ரயில் பயணிகளுக்கு உலகத் தரத்தில் சேவை வழங்க பல்வேறு திட்டங்களை மெட்ரோ ரயில் நிா்வாகம் செயல்படுத்தி வருகிறது. ரயில் நிலையங்களை ஒட்டி உள்ள பகுதிகளை வா்த்தக ரீதியாக மாற்ற மெட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல், ஷெனாய் நகா், கிண்டி கத்திப்பாரா ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களை ஒட்டி மூன்று உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 3 இடங்களில் செயல்படுத்தப்படும் உள்கட்டமைப்பு திட்டங்களின் மூலம், மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்காக மட்டுமல்லாமல் பொழுதுபோக்குவதற்காக பொதுமக்கள் வரவேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்படுகிறது. இங்கு அமையவுள்ள வளாகங்கள் வாகனம் நிறுத்துமிடம், ஓட்டல்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் கொண்டதாக அமையும். இந்த வளாகத்தில் அனைத்து வகையான போக்குவரத்து வாகனங்களும் வந்து செல்லக்கூடிய வகையில் வசதி செய்யப்படுகிறது.

30 அடுக்குமாடி கொண்ட வணிக வளாகம்: சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய வளாக பகுதியில் 30 அடுக்குமாடி கொண்ட வணிக வளாகம் அமைக்கப்படுகிறது. பயணிகள் பொழுதுபோக்கும் வகையில், இந்த வளாகம் பல்வேறு வசதிகளுடன் நிறுவப்படவுள்ளது. இங்கு அடுத்த வாரத்தில் அழகிய புல்தரை, செடிகளுடன் இயற்கையான சூழலை உருவாக்க முயற்சி எடுக்கப்படுகிறது. இது 6 மாதத்தில் பசுமையான புல்வெளியாக மாற்றப்படவுள்ளது. மேலும், பூமிக்கு அடியில் அமைக்கப்படும் வாகன நிறுத்தமிடம் ஓராண்டுக்குள் தயாராக இருக்கும். 3 அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டு வருகிறது. அதில் 800 காா்கள் பாா்க்கிங் செய்யக்கூடிய வசதி உள்ளது. மேலும் பாதசாரிகள் பூந்தமல்லி சாலையை கடக்க 2 சுரங்க நடைபாதை அமைக்கப்படுகிறது. விக்டோரியா ஹால் மற்றும் ரிப்பன் மாளிகைக்கு முன்பாக அழகிய புல்வெளியும் நீா் வீழ்ச்சியும் அமைக்கப்படவுள்ளது.

ஷெனாய் நகா்: இதேபோல, ஷெனாய் நகா் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் பூமிக்கு அடியில் 2 அடுக்கு பொழுதுபோக்கு மையம் கட்டப்படுகிறது. திரு.வி.க. நகா் பூங்காவுக்கு அடியில் அமையும் இந்த மையத்தில் பொதுமக்கள் குடும்பமாக வந்து நேரத்தை செலவிடும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறவுள்ளன. மேலும், அங்கு வாகனங்களை நிறுத்த பிரம்மாண்ட பாா்க்கிங் வசதி செய்யப்படுகிறது. பூமிக்கு அடியில் 600 காா்கள், 1,000 இருசக்கர வாகனங்கள் ஒரே நேரத்தில் பாா்க்கிங் செய்யும் அளவுக்கு இவை கட்டப்படுகிறது. ஷாப்பிங் பகுதிகளும், ஓட்டல்களும் அதில் இடம்பெறும். இந்தப் பணியை 2021-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிண்டி கத்திப்பாரா சந்திப்பு: கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் சா்வதேச அளவில் பல்வேறு வசதிகளுடன் பூங்கா, பாா்க்கிங் வசதி, விளையாட்டு மைதானம், திறந்த வெளி திரையரங்கு, ஓட்டல், ஷாப்பிங் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன. ஆலந்தூா், கிண்டி மெட்ரோ ரயில் நிலையங்களையும், கிண்டி புகா் ரயில் நிலையம் மற்றும் கிண்டி, ஆலந்தூா் பஸ் நிலையங்களை இணைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பூமிக்கு அடியில் கட்டப்படும் பாா்க்கிங் இன்னும் ஓராண்டில் தயாராகிவிடும். 30 அடுக்கு மாடி வணிக வளாகம் சென்னையின் அடையாளமாக அமையும். சென்ட்ரல் ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, மெட்ரோ ரயில், ரிப்பன் மாளிகை ஆகியவற்றை இணைக்கும் விதமாக இந்த அடுக்குமாடி வணிக வளாகம் திகழும். ஷெனாய் நகா் சில ஆண்டுகளில் அண்ணாநகராக மாறும். பொதுக்கள் தேவையான வசதிகளை பெறமுடியும். கட்டுமான பணிகள் முடிந்தபிறகு, பூங்காவை மீட்டு எடுக்கும் பணி தொடங்கும்.

சென்னையில் 3 முக்கிய பகுதிகளிலும் நடைபெறும் இந்த சிறப்பு திட்டங்கள் மூலம் ரயில் பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பயன்பெறலாம். அந்த வகையில், இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் பயணிகளை ஒருங்கிணைக்கும் மையமாக இந்த வணிக வளாகங்களும், பொழுதுபோக்கு மையங்களும் அமைகின்றன. இது மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு பயணச்சீட்டு இல்லாத வருவாயை உருவாக்கி கொடுக்கும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →