மேட்டூர் அணை நீர்மட்டம் மூன்று வாரங்களில் 13.52 அடி சரிவு: விவசாயிகள் கவலை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்று வாரங்களில் 13.52 அடி சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்று வாரங்களில் 13.52 அடி சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை பாசனம் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 28 -ஆம் தேதி வரை டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.
நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 101.73 அடியாக இருந்ததால் குறித்த நாளான ஜூன் 12-ல் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. துவக்கத்தில் வினாடிக்கு 2,000 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு படிப்படியாக 10,000 கனஅடி வரை அதிகரிக்கப்பட்டது. ஜூலை 1-ஆம் தேதி பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்த நிலையில் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரியத் தொடங்கியது. நாளொன்றுக்கு 1.10 அடி வீதம் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
ஜூன் 12-ல் 101.73 அடியாக இருந்த நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 88.21அடியாக சரிந்தது. மூன்று வார காலத்தில் அணையின் நீர்மட்டம் 13.52 அடி சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பருவமழை கை கொடுத்தால் மட்டுமே குறுவை சாகுபடிக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 88.21 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 938 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பாசனத்திற்காக வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 50. 63 டிஎம்சி ஆக இருந்தது.