கூத்தாநல்லூர் : 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மின்சாரக் கம்பிகள் மாற்றம்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மின்சாரக் கம்பிகள் புதன்கிழமை மாற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மின்சாரக் கம்பிகள் புதன்கிழமை மாற்றப்பட்டது.
இது குறித்து, கூத்தாநல்லூர் மின்சார வாரிய உதவிப் பொறியாளர் எஸ்.சங்கர்குமார் கூறுகையில், கூத்தாநல்லூர் அடுத்த வ.உ.சி காலனியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து கூத்தாநல்லூர், நகரம், பொதக்குடி, அத்திக்கடை, வெள்ளக்குடி, கற்கோயில், சித்தாம்பூர், பூதமங்கலம், வடபாதிமங்கலம், சாத்தனூர், பழையனூர், மூலங்குடி, வேளுக்குடி, குருவாடி உள்ளிட்ட கிராமங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.
கூத்தாநல்லூர் வட்டத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலில் வயல்களிலும், சாலைகளிலும், தெருக்களிலும் சாய்ந்து போன மின் கம்பங்களை இரவு, பகல் பாராமல் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டோம்.
தற்போது, கரோனா தொற்று ஏற்பட்டுள்ள காலத்திலும் மின்சாரப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். கூத்தாநல்லூரில் பிரதான சாலையான, திருவாரூர்-மன்னார்குடி சாலையில், லெட்சுமாங்குடிப் பாலத்திலிருந்து, கால்நடை மருத்துவமனை வரையிலும், புதிய மின் கம்பிகள் மாற்றப்படும் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
தாழ்வழுத்த மின் பாதையில் உள்ள, பழமையான மின்சாரக் கம்பிகளை அகற்றி விட்டு, ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் கம்பிகள் மாற்றப்பட்டுள்ளன.
இப்பகுதியில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என 460க்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளன. தொடர்ந்து, அடுத்தடுத்த தெருக்களிலும் புதிய மின் கம்பிகள் மாற்றப்பட உள்ளன. மாற்றப்பட்டுள்ள புதிய மின் கம்பிகளில், மின் விநியோகத்தில் தாழ்வழுத்தம் இருக்காது.
மின்சாரக் கம்பிகள் தாழ்வாக தொங்கிய நிலையில் இருக்கும் இடங்களில், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தால், முன்னுரிமை கொடுக்கப்பட்டு மாற்றப்படும் என மின்சார வாரிய உதவிப் பொறியாளர் எஸ்.சங்கர்குமார் தெரிவித்தார்.