முகப்பு
தமிழ்நாடு

100 அடி நீள ஓவியம்: மதுரை மாணவரின் சாதனை முயற்சி

பழமையான மண்டலா ஓவியத்தை தமிழ் எழுத்துக்களுடன் 100 அடி நீளத்துக்கு வரையும் சாதனை முயற்சியை மதுரை மாணவர் தொடங்கியிருக்கிறார்.

Updated On : 26 ஜூன், 2020 at 12:37 PM
100 அடி நீள ஓவியத்துடன் மதுரை மாணவர்
பகிர்:

மதுரை:  பழமையான மண்டலா ஓவியத்தை தமிழ் எழுத்துக்களுடன் 100 அடி நீளத்துக்கு வரையும் சாதனை முயற்சியை மதுரை மாணவர் தொடங்கியிருக்கிறார்.

மண்டலா ஓவியம் என்பது நான்காம் நூற்றாண்டு காலத்து பழமையான ஓவியம். இவை கணித சாஸ்திரங்களையும், தியான நியமங்களையும் அடிப்படையாகக் கொண்டு வரையக் கூடியவை. இந்த ஓவியங்கள் வரைவதால் மன அழுத்தம் குறையும் என்றும் சொல்லப்படுகிறது. 

இந்த ஓவியத்தில் சாதனை முயற்சியை மேற்கொண்டு வருகிறார் புது விளாங்குடியைச் சேர்ந்த ஹரீஷ் சக்தி (15). இவரது தந்தை அழகர்ராஜ், ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். தாய் உமாதேவி பள்ளி ஆசிரியை.
பத்தாம் வகுப்பு முடித்துள்ள ஹரீஷ் சக்தி கரோனா விடுமுறையை பயனுள்ளதாக்கிக்கொள்ள இந்த ஓவியத்தை இணைய வழியில் பழகி வந்துள்ளார். சிறுவயதில் இருந்தே நுண்கலைகள், வீட்டில் இருக்கும் பொருள்களில் இருந்து கைவினைப் பொருள் தயாரிப்பதில் ஆர்வம் உள்ள சக்தி, மண்டலா ஓவியத்தை எளிதில் கற்றுள்ளார்.

Advertisement

இதை சாதனையாக்கும் வகையில் இந்திய சாதனை புத்தக அமைப்பின் அனுமதியைப் பெற்று ஜூன் 24ஆம் தேதி இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளார்.

காலை 8 முதல் ஒரு மணி வரையும் பின்னர் மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் தினமும் பத்து மணி நேரத்துக்கு இந்த ஓவியம் வரைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல மூன்று நாட்களில் தினமும் 10 மணி நேரம் வீதம் 80 அடி நீளத்துக்கு ஓவியம் வரைய சாதனை புத்தக நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

தற்போது மூன்றாவது நாளாக ஓவியம் வரையும் சாதனையை வெள்ளிக்கிழமை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இந்த ஓவியத்தில் தமிழ் எழுத்துக்கள் நடுவில் இடம்பெறும் வகையிலும் அதைச் சுற்றிலும் மண்டலா ஓவியம் வரைந்து வருகிறார். அ..ஆ...வில் தொடங்கி தமிழின் 247 எழுத்துக்களும் இடம்பெறும் வகையில் இந்த நீண்ட ஓவியம் சென்று கொண்டிருக்கிறது.

இன்று இரவு ஒன்பது மணிக்கு சாதனை முயற்சியை நிறைவு செய்ய உள்ள நிலையில் இலக்கிற்கும் அதிகமாக சுமார் 100 அடி வரை ஓவியம் வரைய திட்டமிட்டுள்ளதாக அவரது தந்தை அழகர்ராஜ் கூறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.