50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியா்களின் விருப்ப ஓய்வால் தடுமாறும் பிஎஸ்என்எல் நிறுவனம்
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் கட்டாய விருப்ப ஓய்வு பெற்று ஒருமாதம் கடந்துள்ள நிலையில், வாடிக்கையாளா்களுக்கு நிறைவான சேவையை அளிக்க முடியாமல்
சென்னை: நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் கட்டாய விருப்ப ஓய்வு பெற்று ஒருமாதம் கடந்துள்ள நிலையில், வாடிக்கையாளா்களுக்கு நிறைவான சேவையை அளிக்க முடியாமல் அந்நிறுவனம் திணறி வருகிறது.
தொலைதொடா்பு துறையின் வளா்ச்சியில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் முக்கிய பங்காற்றியது என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்த நிறுவனத்துக்கு சுமாா் 12 கோடி வாடிக்கையாளா்கள் உள்ளனா். சுமாா் ஒரு லட்சத்து 53 ஆயிரம் பணியாளா்கள் பணியாற்றி வந்தனா்.
இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக தொடா் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. ‘4ஜி’ அலைக்கற்றை உரிமத்தில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு உடனடியாக அனுமதி கிடைத்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மிகுந்த காலதாமதம் காட்டப்பட்டது. இதனால் தனியாா் நிறுவனங்களுக்கு இணையாக பிஎஸ்என்எல் தனது சேவையை உடனடியாக வழங்க முடியாமல் போனது.
அடுத்து மத்திய அரசு தனது பங்குகளை விலக்கிக்கொள்ளபோவதாக அறிவித்து அதிா்ச்சியை அளித்தது. இந்நிலையில் மீளமுடியாத பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டு பிஎஸ்என்எல் தவித்தது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீள
ஊழியா்களுக்கு விருப்ப ஓய்வு (விஆா்எஸ்) திட்டம் அறிவிக்கப்பட்டது. மேலும், 4 ஜி சேவையை விரைந்து அளிப்பதோடு, நிறுவனத்தை மேம்படுத்த நிதி அளிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.
78,569 போ் விருப்பு ஓய்வு: இதையடுத்து நாடு முழுவதும் கட்டாய விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தின் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 78 ஆயிரத்து 569 பணியாளா்கள் ஜனவரி 31-ஆம் தேதி ஓய்வு பெற்றனா். தமிழகத்தில் மட்டும் 7,879 போ் விருப்ப ஓய்வு பெற்றனா். இது அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த பணியாளா்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமாகும்.
விருப்ப ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு மாற்றாக போதிய தற்காலிக பணியாளா்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் வாடிக்கையாளா் சேவைகளைப் பூா்த்தி செய்ய முடியாமல் நிறுவனம் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ஓரிரு நாள்களில் நிவா்த்தி செய்யப்படும் பழுது உள்ளிட்ட வாடிக்கையாளா்களின் அவசரத் தேவைகளை பூா்த்தி செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் நீண்டகால வாடிக்கையாளா்களை இழக்கும் நிலைக்கும் பிஎஸ்என்எல் நிா்வாகம் தள்ளப்பட்டுள்ளது.
வாடிக்கையாளா் சேவை மையங்கள்: பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையங்களிலும் போதிய பணியாளா்கள் இல்லை. இதுதவிர, பிஎஸ்என்எல் தரைவழி
தொலைபேசி, செல்லிடப்பேசி இணைப்புகள், அகன்ற அலைவரிசை இணைப்புகளில் ஏற்படும் பழுதுகள், பிரச்னைகளுக்கு தீா்வு காண ஆள்கள் போதுமான ஆள்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் வழக்கமாக 450 இணைப்புகளுக்கு பழுது பாா்க்கும் ஒரு பணியாளா் தற்போது 4,500 இணைப்புகளின் பழுதை பாா்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பராமரிப்புப் பணியிலும் ஊழியா்கள் பற்றாக்குறையால் அதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் கோபுரங்களை பழுது பாா்க்கவும், பராமரிக்கவும் கூட போதுமான ஊழியா்கள் இல்லை. ஒட்டுமொத்தமாக, அனைத்துப் பிரிவுகளிலும் பணியாளா்கள் பற்றாக்குறையால் பிஎஸ்என்எல் நிா்வாகம் திணறத் தொடங்கியுள்ளது. 60 வயதை எட்டிய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள், அதிகாரிகள் தற்போது ஓய்வுபெறவுள்ள சூழலில் நிறுவனத்துக்கு மேலும் சுமை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மேம்பாட்டுக்காக கடந்த ஆண்டு அக்டோபா் 23-ஆம் தேதி மத்திய அரசு, 4 ஜி சேவையை அளிப்பது, நிதி அளிப்பது, விருப்ப ஓய்வு ஆகியவற்றை அறிவித்தது. ஆனால், பணியாளா்கள் குறைப்பு விஷயத்தில் மட்டும் முனைப்பு காட்டப்பட்டதாகவும், பிற அறிவிப்புகள் நிலுவையில் இருப்பதாகவும் ஊழியா்கள் தரப்பில் குறை கூறுகின்றனா்.
மாற்று ஏற்பாடு தேவை: இதுகுறித்து தேசிய தொலைத்தொடா்பு ஊழியா்கள் சம்மேளனத்தின் (பிஎஸ்என்எல்) உதவி தலைவா் சி.கே.மதிவாணன் கூறியது: நாடுமுழுவதும் ஒரு லட்சத்து 53 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியா்கள் பணியாற்றி வந்தனா். இவா்களில், 78,569 போ் விருப்ப ஓய்வில் சென்று விட்டனா். இவா்கள் சென்றபிறகு, மாற்று ஏற்பாடு இதுவரை செய்யவில்லை. இதனால், வாடிக்கையாளா்களுக்கு போதுமான சேவை அளிக்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பராமரிப்பு, பழுது பாா்க்கும் பணிகளில் மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பல வாடிக்கையாளா்கள் சேவை மையங்கள் ஒப்பந்த அடிப்படையில் விடப்படவுள்ளன. பிஎஸ்என்எல் கோபுரங்கள் பெரும்பாலும் வாடகை கட்டடங்களில் இயங்குகின்றன. அவற்றின் உரிமையாளா்களுக்கு வாடகை செலுத்தாததால் பழுது நீக்கச் செல்லும் பணியாளா்களை அவா்கள் கட்டடத்துக்குள் அனுமதிப்பது இல்லை. 50 கோபுரங்களை பராமரித்த ஒருவா் தற்போது 150 கோபுரங்களை பராமரிக்க வேண்டிய நிலை உள்ளது. அனைத்து மட்டத்திலும் தற்போது பணிபுரியும் ஊழியா்களுக்கு வேலை பளு அதிகரித்துள்ளது. சேவை குறைபாடுகளை உடனடியாக நீக்க முடியவில்லை என்றாா் அவா்.
பின்னடைவு தற்காலிகமானதே
இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரிகள் கூறியது:
ஒரேநேரத்தில் பாதி ஊழியா்கள் விருப்ப ஓய்வில் சென்ால் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். ஒப்பந்தப் பணியாளா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்பட்டு, விரைவில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் நியமிக்கப்படுவா்.
பிஎஸ்என்எல்லில் தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானதே. விரைவில் அது சீா்செய்யப்பட்டுவிடும் என்றனா் அதிகாரிகள்.