தமிழக கோயில்களை தொல்லியல்துறை கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும்! ராமதாஸ்
தமிழக கோயில்களை தொல்லியல்துறை கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக கோயில்களை தொல்லியல்துறை கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள பழமை வாய்ந்த திருக்கோயில்களின் நிர்வாகத்தை மத்திய தொல்லியல் துறைக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதன்படி தமிழகத்திலுள்ள பல கோயில்களின் பராமரிப்பும் நிர்வாகமும் மத்திய தொல்லியல் துறைக்கு மாற்றப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் செயல் ஆகும்.
இந்து சமய அறநிலையத்துறை, தமிழக தொல்லியல் துறை ஆகியவற்றை விட மத்திய தொல்லியல் துறையால் தமிழக ஆலயங்களை சிறப்பாக பராமரிக்க முடியாது. தஞ்சாவூர் பெரிய கோயில், மாமல்லபுரம், செஞ்சி தேசிங்கு ராஜன் கோட்டை, திருவண்ணாமலை கந்தாசிரமம் ஆகியவை மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்கு சென்ற பிறகு அவற்றின் பராமரிப்பு மிகவும் மோசமாகி விட்டது உண்மை. தமிழகத்தில் மீதமுள்ள கோயில்கள் சிறந்த பராமரிப்புடனும், பக்தர்கள் வருகையுடனும் உயிரோட்டமாக திகழ வேண்டுமானால் அவை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலேயே தொடர வேண்டும்.
இந்தியாவில் ஏதேனும் கோயில்கள் பெருமையுடனும், புகழுடனும் இருந்தால் அந்தக் கோயில்களை தங்கள் வசமாக்கிக் கொள்வது மத்திய தொல்லியல் துறையின் வாடிக்கையாகி வருகிறது. 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தை மத்திய தொல்லியல் துறை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவித்து அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. அதனால் அந்தக் கோயிலின் வழக்கமான வழிபாட்டு முறைகள் பாதிக்கப்பட்ட நிலையில், மூன்றாண்டு கால அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அந்த கோயில் மத்திய தொல்லியல் துறையிடமிருந்து 2005-ஆம் ஆண்டில் மீட்கப்பட்டு, தமிழக இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு தான் அந்தக் கோயிலுக்கு அதன் பழைய பொலிவும், பெருமையும் திரும்பக் கிடைத்தது.
கடந்த 2018-ஆம் ஆண்டில் கூட திருப்பதி ஏழுமலையான் கோயிலை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள முடிவு செய்த மத்திய தொல்லியல் துறை, அதை வலியுறுத்தி திருப்பதி கோயில் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியது. ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து தொல்லியல் துறை அதன் முடிவை திரும்பப் பெற்றது. இப்போது அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலுள்ள கோயில்களை கையகப்படுத்த தொல்லியல் துறை துடிப்பது நியாயமல்ல. தமிழகத்திலுள்ள கோயில்களை கையகப்படுத்தும் திட்டம் தொல்லியல் துறைக்கு இருந்தால், அதை கைவிட வேண்டும். தமிழ்நாட்டு கோயில்களை தொல்லியல் துறை கையகப்படுத்த முயன்றால் அதை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளர்.