நாகை மாவட்டத்தில் பெட்ரோல் விற்பனைக்குப் புதிய கட்டுப்பாடுகள் : ஆட்சியர்
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதையொட்டி, நாகை மாவட்டத்தில் பெட்ரோல் விற்பனைக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் தெரிவித்தார்.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதையொட்டி, நாகை மாவட்டத்தில் பெட்ரோல் விற்பனைக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் தெரிவித்தார்.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி : கரோனா தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு உத்தரவுப்படி ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் அவசியமற்ற முறையில் சாலைகளில் திரிந்து வருகின்றனர். இது தொடர்பாக காவல் துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல முறை வேண்டுகோள் விடுத்தும் உரிய பலன் கிட்டவில்லை. இதன் காரணமாக, நாகை மாவட்டத்தில் பெட்ரோல் விற்பனைக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, மார்ச் 28-ஆம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு பெட்ரோல் விநியோகிக்கப்படாது. ஒருவருக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சமாக மற்றும் அதிகபட்சமாக ரூ. 100-க்கு மட்டுமே பெட்ரோல் விற்பனை செய்யப்படும். அரசுத் துறை அலுவலர்கள், ஊடகவியலாளர்கள், காவல் துறையினருக்கு மட்டும் இந்தக் கட்டுப்பாட்டில் இருந்து விதி விலக்கு அளிக்கப்படுகிறது.
ஒரு மோட்டார் சைக்கிளில் இருவராக வரும் எவருக்கும் இனி பெட்ரோல் விநியாகிக்கப்படாது. மார்ச் 29-ஆம் தேதி முதல் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் விநியாகிக்கக் கூடாது எனவும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகளைக் கண்காணித்துப் பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நடைமுறையை மீறி செயல்படும் இருசக்கர வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக முடக்கவும், நிரந்தரமாக ரத்து செய்யவும் இனி வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரவர் இல்லங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் அவர்களின் இல்லத்துக்குச் சென்று வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் யாரேனும், விதிகளுக்குப் புறம்பாக வெளியில் சுற்றுவது தெரியவந்தால், தொடர்புடையோரின் பாஸ்போர்ட்டை முடக்கி, ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர் பிரவீன் பி. நாயர்.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் மு. இந்துமதி ஆகியோர் உடனிருந்தனர்.