முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்திலும் மதுபானங்கள் விலை உயர்வு; நாளை முதல் கடைகளும் திறப்பு

தமிழகத்தில் சுமார் 40 நாட்களுக்குப் பிறகு மே 7-ம் தேதி சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் திறக்கப்பட உள்ளது. அதோடு, மதுபானங்களின் விலை உயர்வும் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

சென்னை: தமிழகத்தில் சுமார் 40 நாள்களுக்குப் பிறகு, மே 7-ம் தேதி  வியாழக்கிழமை, சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட உள்ளன. மேலும், மதுபானங்களின் விலை உயர்வும் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

தில்லி உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் மதுபானங்களின் விலை அதிகபட்சமாக ரூ. 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் 7-ம் தேதி மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன. ஆனால், பல மாநிலங்களில் கடந்த திங்கள்கிழமை முதலே மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு, விறுவிறுப்பாக  விற்பனை நடந்து வருகிறது.

மதுபானக் கடைகள் திறப்பு அறிவிப்புடன் தற்போது மதுவகைகளின் விலை களிலும் உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது லேசான அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

இதுபற்றி வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15 சதவீதம் உயர்த்தியுள்ள காரணத்தினால், சாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 10 ரூபாய் கூடுதலாகவும், நடுத்தர மற்றும் பிரீமியம் வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாய் கூடுதலாகவும் 7.5.2020 முதல் உயர்த்தப்படுகிறது என்று டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆந்திரத்தில் மதுபானங்களின் விலை முதலில் 25 சதவிகிதமும் தொடர்ந்து 50 சதவிகிதமும் என அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தில்லியிலோ கரோனா சிறப்புக் கட்டணம் என்று குறிப்பிட்டு 70 சதவிகிதம் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. கர்நாடகத்திலும் விலைகளை உயர்த்துவது பற்றி சிந்தித்து வருவதாக கலால் துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →