முகப்பு
தமிழ்நாடு

திருவாரூர், நாகையில் ரூ. 1,600 கோடியில் ஆறுகள் தூர்வாரும் பணி: அமைச்சர் இரா.காமராஜ் தகவல்

திருவாரூர் நாகை மாவட்டங்களில்  ரூபாய்  1600 கோடி  செலவில்  ஆறுகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.  அமைச்சர்  இரா.காமராஜ்  பேட்டி. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:41 PM
பகிர்:

திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் ஆசிய வங்கி உதவியுடன் சிறப்புத் திட்டமாக ரூபாய் 1600 கோடி செலவில் ஆறுகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறதென, நன்னிலம் அருகே ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஊரடங்கால் பாதித்தவர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான கூடுதல் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்கான விலையில்லா ரேசன் பொருள்கள் விநியோகம் விரைவில் தொடங்கும். அதற்கான தேதியினை முதல்வர் அறிவிப்பார்.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு ஆறு மற்றும் வாய்க்கால்களைத் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் ஆசிய வங்கியின் நிதியுதவியுடன் ரூ.1,600 கோடி மதிப்பில் ஆறுகளைத் தூர்வாரி கரைகள் பலப்படுத்துதல், மதகு மற்றும் தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆறு, குளம், வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர்வாரும்  குடிமராமத்துப் பணிகள் திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ20.23 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.

நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. உடனுக்குடன் அவர்களது கோரிக்கைகள் தீர்வு காணப்படும். நன்னிலம் தொகுதியில் தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். தமிழகத்தில் 36 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

கரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை நீக்கும் வகையில் நன்னிலம் தொகுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் அதிமுக சார்பில் மளிகைப் பொருள்கள்,  அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் தொகுதியில் உள்ள ஓரு லட்சம் குடும்பங்களுக்கும் அதிமுக சார்பில் கபசுர குடிநீர் சூரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  திருக்கொட்டாரம், மணலி, காளியாகுடி, கடகம், வேலங்குடி, மேனாங்குடி, உபயவேதாந்தபுரம், கொல்லாபுரம்  ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து அமைச்சர் காமராஜ்  கோரிக்கை மனுக்களை வாங்கினார். மணலியில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் சூரணத்தையும் அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வுகளின்போது முன்னாள் எம்.பி. கோபால், நன்னிலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் விஜயலெட்சுமி இராம குணசேகரன், திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் சிபிஜி. அன்பு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் இராம குணசேகரன், ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.சம்பத் மற்றும்  ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். 

நன்னிலம் அருகே திருக்கொட்டாரம் பகுதியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை அமைச்சர் பெற்ற போது எடுத்த படம். அருகில் முன்னாள் எம்பி கோபால், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி இராம குணசேகரன், துணைத் தலைவர் சிபிஜி. அன்பு ஆகியோர் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.