முகப்பு
தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: மு.க. ஸ்டாலின்

​இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
கோப்புப்படம்
பகிர்:


இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழகத்தில் ‘ஆன்லைன்’ சூதாட்டம், 11 பேர் உயிரைப் பறித்துள்ள நிலையில் - அது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டு - அது தொடர்பாக முடிவு எடுக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என்று  எடப்பாடி அ.தி.மு.க. அரசு கேட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. 

சென்னை உயர்நீதிமன்றத்திலும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் இது தொடர்பாக வழக்குகள் ஏற்கனவே தொடரப்பட்டு - ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் எனக் கடந்த ஜூலை மாதமே அ.தி.மு.க. அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  

அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அ.தி.மு.க. அரசு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது “எங்களுக்கு மேலும் 10 நாட்கள் கால அவகாசம் கொடுங்கள்” எனக் கேட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

“சூதாட்டம் கொடுமையானது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளைத் தடுப்பது குறித்து அரசு சட்டமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜூலை மாதமே உத்தரவிட்டும், மூன்று மாதமாகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்” என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேற்றைய தினம் வழக்கு விசாரணையின் போது கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். 

இந்தக் கேள்விக்குப் பிறகாவது முதல்வர் பழனிசாமி உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடை செய்துள்ளன. 

தமிழகத்தில் மட்டும் இதைத் தடை செய்யத்  தயங்குவது ஏன்? என்ன உள்நோக்கம்? இயந்திரங்களை (BOTS) வைத்து இளைஞர்களின் உயிரைப் பறிக்கும்  இந்த ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாகத் தடைசெய்து, சமூகத்தைச் சூழ்ந்துள்ள தீமையை நீக்கிட வேண்டும் எனவும், தாய்மார்களின் கண்ணீரைத் துடைத்திட முயற்சி செய்ய  வேண்டும் எனவும் முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்."
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.