விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்புகள் - அமைச்சர் பாண்டியராஜன்
தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தரையிறங்கும் விமானங்களிலும் இனி தமிழ் மொழியில் அறிவிப்பு வெளியாகும் என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தரையிறங்கும் விமானங்களிலும் இனி தமிழ் மொழியில் அறிவிப்பு வெளியாகும் என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக தில்லி சென்ற தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழ் பேசும் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள விமான நிலையங்களிலும் மற்றும் இங்கிருந்து புறப்படுகின்ற விமானங்களிலும் செய்யப்படும் அறிவிப்புகள் இனிமேல் தமிழ் மொழியில் முதலாவதாக இடம்பெறும் என்றார்.
இது குறித்து விமானத்துறை அமைச்சகம் பல்வேறு விமான சேவை நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது என்று கூறிய அமைச்சர், இதற்கு சட்டபூர்வ செயல்வடிவம் தந்ததற்காக விமான போக்குவரத்துத் துறையின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு தனது மனமார்ந்த நன்றியையும் அவர் தெரிவித்தார். தமிழர்களின் திருநாளான பொங்கலுக்குள் தமிழ்நாட்டின் விமான நிலையங்களில் இறங்கும் விமானங்களில் இத்தகைய அறிவிப்புகள் தமிழ் மொழியில் முதலாவதாக ஒலிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.