ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதரின் முக்தி தினம்: கீர்த்தனை பாடி வழிபாடு
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதரின் முக்தி அடைந்த தினமான இன்று திருவாரூரில் அவர் பிறந்த இல்லத்தில் இசை கலைஞர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
திருவாரூர்: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதரின் முக்தி அடைந்த தினமான இன்று திருவாரூரில் அவர் பிறந்த இல்லத்தில் இசை கலைஞர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பல்வேறு மாநிலங்களில் உள்ள இசைகலைஞர்கள் கரோனாவையொட்டி காணொலி காட்சி மூலம் அவரது கீர்த்தனைகளை பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.
சங்கீத உலகின் மும்மணிகள் என போற்றப்படும் ஸ்ரீசியாமாசாஸ்திரிகள், ஸ்ரீதியாகராஜர், ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர் ஆகிய மூவரும் கி.பி.17-ம் நூற்றாண்டில் திருவாரூரில் பிறந்து சாஸ்திரிய சங்கீதத்தை வளர்த்து உலக அளவில் கொண்டுசென்றனர்.
மும்மூர்த்திகளில் மூன்றாவதாக அவதரித்த ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர் கி.பி.1776-ம் ஆண்டு பங்குனி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் திருவாரூர் மேலவடம்போக்கித்தெருவில் உள்ள இல்லத்தில் பிறந்தார்.
இவர் வாழ்நாளில் எண்ணற்ற சங்கீத கீர்த்தனைகளை இறைவன் மீது இயற்றியுள்ளார். இவரது எண்ணற்ற கீர்த்தனைகளில் ராகபாவம் ததும்பும் நவவர்ண கீர்த்தனைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
இவர் முக்தி அடைந்த தினமான இன்று திருவாரூரில் உள்ள அவரது பிறந்த இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மகா தீபாரதனையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இசைக்கலைஞர்கள் ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர் கீர்த்தனைகளை பாடினர்.
ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதரின் முக்திநாளில் அவர் இயற்றிய கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை இணையதளம் மூலமாக பிரபல இசை கலைஞர் அரிவாரமங்களம் ஏ.கே. பழனிவேல் மங்கள இசையுடன் தொடங்கினார்.
இதனை தொடர்ந்து சென்னையை சேர்ந்த கனகதுர்க்கா, கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த கோமதி ஆகியோர் காணொலி வாயிலாக ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர் இயற்றிய கீர்த்தனைகளை பாட அவரது பிறந்த இடத்தில் ஒளிபரப்பப்பட்டது.