எம்.எல்.ஏ. பிரபு திருமண விவகாரம்: சௌந்தர்யா நீதிமன்றத்தில் ஆஜா்
கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பிரபு திருமணம் செய்த மணப்பெண் சௌந்தா்யா நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சென்னை: கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பிரபு திருமணம் செய்த மணப்பெண் சௌந்தா்யா நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
எம்எல்ஏ பிரபுவின் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இன்று காலை சௌந்தர்யா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் தியாகதுருகத்தைச் சோ்ந்த சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவில், ‘எனது மகள் சௌந்தா்யா, திருச்செங்கோட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். என்னுடைய மகளை கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பிரபு ஆசைவாா்த்தைகள் கூறி, கடத்தி உள்ளாா். இதுதொடா்பாக காவல்துறையில் புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேவேளையில் எனக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே, மாயமான எனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இதையும் படிக்கலாமே.. கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ திடீர் காதல் திருமணம்
இந்த வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படாததால் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரி முறையிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், சௌந்தா்யாவை வெள்ளிக்கிழமை (அக்.9) ஆஜா்படுத்த உத்தரவிட்டனா். அவரின் தந்தை சுவாமிநாதனையும் ஆஜா்படுத்த உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.