முகப்பு
தமிழ்நாடு

'கடன்கார மாநிலமாக ஆக்கியதுதான் அதிமுகவின் சாதனை'

தமிழ்நாட்டை கடன்கார மாநிலமாக ஆக்கியது மட்டும்தான் அதிமுக செய்த சாதனை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

தமிழ்நாட்டை கடன்கார மாநிலமாக ஆக்கியது மட்டும்தான் அதிமுக செய்த சாதனை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றிய மு.க.ஸ்டாலின், 2011 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டை ஆள்கிறது அதிமுக. பொருளாதார வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள்? மத்திய அரசு சமீபத்தில் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதாவது ‘மாநிலத் தொழில் சீர்திருத்த செயல் திட்டம்’ என்ற அறிக்கையை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. எளிதாக தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசைப்பட்டியல் அது. இதில் 14 ஆவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. பதினான்காவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் தொழில் தொடங்க யார் வருவார்கள்? இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டது மத்திய அரசு. இதைவிட மோசமான ஆட்சிக்கு ஆதாரம் வேண்டுமா? கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது மூன்றாவது இடத்தில் தமிழகம் இருந்தது. அதுதான் உண்மையான சாதனை.

14 ஆவது இடத்தில் இருப்பது சாதனை அல்ல, வேதனை! எனக்கு முன்னால் பேசிய வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் தமிழ்நாட்டின் உரிமையை எந்தெந்த வகையில் எல்லாம் எடப்பாடி அரசு காவு கொடுத்துள்ளது என்பதை வரிசையாகப் பட்டியலிட்டார். உரிமையைக் கேட்டால், தனது நாற்காலி பறிபோய்விடும் என்பது பழனிசாமிக்குத் தெரியும். அதனால் தான் அவர் தனது நாற்காலியைக் காப்பதற்காக தமிழ்நாட்டையே தில்லி பா.ஜ.க.வுக்கு அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி. கூட்டாட்சித் தத்துவத்தையே மத்திய அரசாங்கம் மதிக்கவில்லை. மாநில அரசுகளை அதிகாரம் பொருந்திய ஜனநாயக அமைப்புகளாகவே மத்திய அரசு நினைக்கவில்லை. இதனை எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்க வேண்டாமா?

வரி வசூலில் மாநிலங்களுக்கு இருந்த உரிமையை ஜி.எஸ்.டி. வரி முறையானது பறித்துவிட்டது. இப்படித்தான் ஆகும் என்பதால் இந்த வரிமுறையையே ஆரம்பத்தில் இருந்து நாம் எதிர்த்தோம். மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பீட்டை 2022 ஆம் ஆண்டு வரைக்கும் மத்திய அரசு சரிக்கட்டும் என்றார்கள். ஆனால் கொடுத்தார்களா? இல்லை. பணம் கேட்டால், மாநிலங்களுக்கு கடனாக தருகிறோம் அல்லது மாநில அரசுகள் யாரிடமாவது கடன் வாங்கிக் கொள்ளட்டும் என்கிறது மத்திய அரசு. இது மத்திய அரசா? அல்லது கந்துவட்டி அரசா? மாநிலங்கள் சேர்ந்த ஒன்றியம் தானே இந்தியா? அப்படியானால் மாநில உரிமைகளை மறுப்பது ஏன்? மாநிலங்களுக்கு வரவேண்டிய வருவாயைத் தடுத்து, அவர்களே கொண்டு போய்விட்டு, மாநிலங்களை பிச்சை எடுக்க வைப்பது ஏன்? இதை எல்லாம் பழனிசாமி கேட்க மாட்டார். அவருக்கு பன்னீர்செல்வத்தோடு சண்டை போடுவதிலேயே காலம் ஓடிவிட்டது. அவர் எங்கே மத்திய அரசோடு சண்டை போடப்போகிறார்?

இதனைத் தமிழகம் எதிர்க்காவிட்டாலும், சில மாநிலங்கள் கடுமையாக எதிர்த்துள்ளன. அந்த மாநிலத்தை ஆள்வது முதுகெலும்பு உள்ள முதலமைச்சர்கள். இங்கே ஆள்வது மண்புழு முதலமைச்சர் என்பதால் அவரால் எழுந்து நிற்கவே முடியவில்லை. ஆனால் கொரோனா காலத்தில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் கோடி வரைக்கும் தமிழக அரசு கடன் வாங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கரோனா காலத்திலும் கடன் வாங்குவதை பழனிசாமி நிறுத்தவில்லை. மக்களுக்கு உதவி செய்வதற்காக கடன் வாங்கவில்லை. கொள்ளையடிக்க கடன் வாங்கி உள்ளார்கள். ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து சொல்கிறேன். ஆனால் தரவில்லை.

ஏன் தரவில்லை? பணமில்லையா? பணம் இருக்கிறது? ஆனால் மனமில்லை! அதுதான் உண்மை. சாமான்ய மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக சில ஆயிரம் கூட தரத் தயங்கும் பழனிசாமி, தனது ஆட்சியைத் தக்க வைக்க பல நூறு கோடிகள் செலவு செய்யத் தயாராக இருக்கிறார். தமிழ்நாட்டை கடன்கார மாநிலமாக ஆக்குவதில்தான் பழனிசாமி சாதனை செய்துள்ளார் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →