சீர்காழியில் விழிப்புணர்வு சைக்கிள் மராத்தான்
இதயம் காப்போம் மற்றும் கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள எதிர்ப்பு சக்தியை கூட்டும் வகையில் விழிப்புணர்வு மராத்தான் சீர்காழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சீர்காழி: இதயத்தை பாதுகாக்கவும், கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள எதிர்ப்பு சக்தியை கூட்டும் வகையிலும் விழிப்புணர்வு மராத்தான் சீர்காழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சீர்காழி ரோட்டரி சங்கம், டெம்பிள்டவுன் ரோட்டரி சங்கம், திருமுல்லைவாசல் ரோட்டரி சங்கம் இணைந்து சீர்காழி ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
ரோட்டரி துணை ஆளுநர் என். இளங்கோவன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு, டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் டி.ரவிச்சந்திரன், திருமுல்லைவாசல் கிளப் தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சைக்கிள் மராத்தானை சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பங்கேற்று முக்கிய வீதிகளின் வழியாக தென்பாதி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தனர். அங்குப் போட்டியில் பங்கேற்றவர்களில் குலுக்கல் முறையில் ராஜபாண்டியன் என்ற மாணவர் தேர்வு செய்யப்பட்டு மிதிவண்டி இலவசமாக வழங்கப்பட்டது.
இதனை 'இதயம் காப்போம்' திட்ட மாவட்டத் தலைவர் வி.பிரபாகர் வழங்கினார். இதில் முன்னாள் துணை ஆளுநர்கள் செல்வக்குமார், சுசீந்திரன், சாமி, செழியன், பெஸ்ட் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜ்கமல், இரு சங்க செயலாளர்கள் சண்முகம், துரைசாமி பொருளாளர்கள் அய்யூப் அன்சாரி, வெங்கட்ராமன் மற்றும் பலர் பங்கேற்றனர்.