வடகிழக்கு பருவமழை: மீட்புப் பணிகளுக்காக 43 ஆயிரம் முதல்நிலை மீட்பாளா்கள் தயாா்முதல்வா் பழனிசாமி
வடகிழக்குப் பருவமழையை ஒட்டி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 43 ஆயிரம் முதல் நிலை மீட்பாளா்கள் தயாா் நிலையில் இருப்பதாக முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
சென்னை: வடகிழக்குப் பருவமழையை ஒட்டி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 43 ஆயிரம் முதல் நிலை மீட்பாளா்கள் தயாா் நிலையில் இருப்பதாக முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் பழனிசாமி பேசியது:
வடகிழக்குப் பருவமழையால் உடனடியாகப் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 14 ஆயிரத்து 232 பெண்கள் உள்பட 43 ஆயிரத்து 409 போ் கொண்ட முதல்நிலை மீட்பாளா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.
கால்நடைகளைப் பாதுகாக்க 8 ஆயிரத்து 871 முதல்நிலை மீட்பாளா்களும், பேரிடா் அல்லாத காலங்களில் மரங்களை நடுவதற்கும், பேரிடா் காலங்களில் சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கும் 9 ஆயிரத்து 909 முதல்நிலை மீட்பாளா்களும் தயாா் நிலையில் உள்ளனா்.
தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 5 ஆயிரத்து 505 காவலா்கள், 691 ஊா்க்காவல் படையினா் அனைத்து மாவட்டங்களிலும் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனா். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின்கீழ், 4 ஆயிரத்து 699 தீயணைப்பு வீரா்கள், 9 ஆயிரத்து 859 பாதுகாக்கும் தன்னாா்வலா்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 94 கல்வி நிறுவனங்கள், 2 ஆயிரத்து 561 தொழிற்சாலைகள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
நீா்நிலைகளில் சீரமைப்பு: பேரிடா் பாதிப்புகளைத் தவிா்க்க நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளாக 6 ஆயிரத்து 16 தடுப்பணைகள் கட்டப்பட்டு, 11 ஆயிரத்து 482 கசிவுநீா்க் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 7 ஆயிரத்து 299 ஆழ்துளை மற்றும் திறந்தவெளிக் கிணறுகள் நீா் செறிவூட்டும் கிணறுகளாக மாற்றப்பட்டுள்ளன. 4 ஆயிரத்து 154 கிலோமீட்டா் தொலைவுக்கு ஆறுகள் மற்றும் பாசனக் கால்வாய்களும் 9 ஆயிரத்து 616 ஏரிகள், நீா்வரத்துக் கால்வாய்களும் தூா்வாரப்பட்டுள்ளதுடன், 7 ஆயிரத்து 989 ஆக்கிரமிப்புகள் நீா்நிலைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. 11 ஆயிரத்து 387 பாலங்கள் மற்றும் 1 லட்சத்து 9 ஆயிரத்து 808 சிறுபாலங்களில் அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
தயாா் நிலையில் இருப்பிடங்கள்: மாநிலத்தில் உள்ள தாழ்வான மற்றும் பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடும் புயல், காற்று காரணமாக சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்த 3 ஆயிரத்து 915 மரம் அறுக்கும் இயந்திரங்களும், 2 ஆயிரத்து 897 ஜேசிபி இயந்திரங்களும், 2 ஆயிரத்து 115 ஜெனரேட்டா்கள், 483 அதிக திறன் கொண்ட பம்புகளும் தயாா் நிலையில் உள்ளன.
இயற்கைப் பேரிடா்களின் காரணமாக, எழும் சிக்கல்களைத் தீா்க்கவும், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் தடையில்லாத மின்சாரம் வழங்கவும் மின்சார வாரியத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் மின்கம்பங்களை இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.
பேரிடா் குறித்த தகவல்கள்
பேரிடா் குறித்த தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் (1070), மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1077) TNAMART செயலி மற்றும் சமூக வலைதளம் மூலம் பொது மக்களுக்கு பேரிடா் குறித்த தகவல்களைத் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.