தாய் மறைவு: முதல்வருக்கு நேரில் ஸ்டாலின் ஆறுதல்
முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி முதல்வரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி முதல்வரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட, சிலுவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர் மனைவி தவுசாயம்மாள், தமிழக முதல்வரின் தாயாரான இவர், உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை (அக்.13) அதிகாலை 1 மணியளவில் காலமானார்.
முதல்வரின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனசாமியை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து முதல்வரின் தாயார் படத்திற்கு மலர்தூவி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். உடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப்பொதுச்செயலாளர் பொன்முடி சென்றனர். ஏற்கெனவே போனில் ஆறுதல் கூறிய நிலையில் தற்போது நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆறுதல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.