பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் பெட்ரோல் ஊற்றி பாஜக பிரமுகர் தற்கொலை முயற்சி
ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரின் மகனும், பாஜக பிரமுகருமான இளைஞர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பட்டுக்கோட்டை: வாகனக் கடன் பெற்று அதற்கான மாதத் தவணையை ஒழுங்காக கட்டாததால் தனியார் நிதிநிறுவன அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் காவலர்கள் சனிக்கிழமை இரவு விசாரணை நடத்தியபோது, ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரின் மகனும், பாஜக பிரமுகருமான இளைஞர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பட்டுக்கோட்டை வளவன்புரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் பிச்சைப்பிள்ளை. இவரது மகன் பிரவீன் (34). தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக இளைஞரணிச் செயலராக உள்ளார். இவர் ஸ்ரீராம் நிதி நிறுவனத்தில் வாகனக் கடன் பெற்று ஒரு என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள், ஒரு மகேந்திரா வேன், ஒரு ஹூண்டாய் கார் என மொத்தம் 3 வாகனங்கள் வாங்கியுள்ளார். ஆனால் அக்கடனுக்கான மாதத் தவணையை அவர் சரிவர செலுத்தாததால் அந்த நிதி நிறுவனத்தினர் முறையாக நீதிமன்ற உத்தரவு பெற்று மேற்படி வாகனங்களை பறிமுதல் செய்வதற்காக பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய காவலரின் உதவியை நாடியுள்ளனர்.
அதனடிப்படையில், காவலர்கள் அழைத்ததன்பேரில், பிரவீன் தனது நண்பர்கள் சிலருடன் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு வந்துள்ளார். வாங்கிய கடனுக்கான மாதத் தவணையை கட்டாதது குறித்து காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் கடனை முறையாக திருப்பிச் செலுத்தாததால் அவரது வாகனங்களை நீதிமன்ற உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்போவதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீன், சிறுநீர் கழிக்கச் செல்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து வெளியே வந்து, காவல் நிலைய வளாகத்திற்கு உள்ளேயே பெட்ரோல் வாங்கி வரச்செய்து, முகநூல் வலைத்தளத்தில் விடியோ லைவ்வாக பதிவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனைக்கண்ட காவலர்கள் ஓடிச் சென்று அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்ததுடன், அவரது செல்போனை பறிமுதல் செய்தனர்.
பெட்ரோல் பட்டதால் முகத்திலும், கண்களிலும் பிரவீனுக்கு எரிச்சல் ஏற்பட்டதையடுத்து காவலர்கள் உடனடியாக அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுதொடர்பாக, காவல் நிலைய வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றதாக பிரவீன் மீது பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.