நெடுஞ்சாலை கணக்காளர்கள் தேர்வு முறைகேடு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
நெடுஞ்சாலைத் துறை மண்டல கணக்காளர்கள் பணிக்கான தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை மண்டல கணக்காளர்கள் பணிக்கான தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், நெடுஞ்சாலைத் துறை மண்டல கணக்காளர்கள் பணி நியமனத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அந்த தேர்வில் தேர்வான 10 பேரின் தேர்வை ரத்து செய்ய அரசு செயலாளர் பரிந்துரை செய்திருந்தார். ஆனால் நெடுஞ்சாலைத் துறை இயக்குனர் 8 பேரின் தேர்ச்சியை மட்டுமே ரத்து செய்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு போல, விடைத்தாள் மாற்றம் செய்து முறைகேடாகத் தேர்வு முடிவுகளை நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே மண்டல கணக்காளர் மீது நான்கரை லட்ச ரூபாய் அளவுக்கு லஞ்ச ஒழிப்பு வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. எனவே இந்த தேர்வு குறித்து முழுமையாக விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு தலைமை கணக்காளர் தரப்பில், தலைமை கணக்காளர் நடத்திய விசாரணையில், தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 16 விண்ணப்பதாரர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது தமிழக அரசுத்தரப்பில், முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் பதவி இறக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதில் மனுவைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.