பென்னிகுயிக் நினைவு இல்லத்தில் கலைஞர் நூலகம் அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அதிமுக
பென்னிகுயிக் நினைவு இல்லத்தில் கலைஞர் நூலகம் அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர
பென்னிகுயிக் நினைவு இல்லத்தில் கலைஞர் நூலகம் அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், கர்னல் ஜான் பென்னிகுயிக் ஆற்றியப் பணி பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியது. முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கான பணியினை மேற்கொள்ளும் பொறுப்பு கர்னல் ஜான் பென்னிகுயிக்கிடம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஒப்படைக்கப்பட்டது. பல்வேறு இடையூறுகளைத் தாண்டி பாதியளவு அணை கட்டி முடிக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட காலத்தில் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் நிதி ஒதுக்காததால், இங்கிலாந்து சென்று தன்னுடைய குடும்ப சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தவர் கர்னல் ஜான் பென்னிகுயிக் என்று வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
இதன் பயனாக, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தற்போது பாசன வசதி பெற்று வருகின்றன. இவரின் தியாகத்தைப் போற்றும் வகையில், தேனி மாவட்டம், லோயர் கேம்பில் கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு நினைவு மணி மண்டபத்தை அவரது பிறந்த நாளான 15.01.2013 அன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்ததையும், அதே நிகழ்ச்சியில், புதிதாக கட்டப்பட்டு வரும் தேனி பேருந்து நிலையத்திற்கு கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்படும் என்று அறிவித்ததையும் இங்கே நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இதையும் படிக்கலாமே நண்பர்கள் தின வாழ்த்து: மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி
தன்னம்பிக்கையுடனும், மன உறுதியுடனும், விடா முயற்சியுடனும், துணிவுடனும் செயல்பட்டு, தமிழ் நாட்டிற்காக, தமிழக மக்களுக்காக, குறிப்பாக விவசாயிகளுக்காக பாடுபட்டு முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் நினைவு இல்லத்தை இடித்துவிட்டு அங்கு கலைஞரின் பெயரில் நூலகம் அமைப்பது என்ற முடிவு, சரித்திரத்தை சிதைப்பதற்கு சமம் என்பதைச் சுட்டிக்காட்டி, அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், யாருக்கும் ஆட்சேபனை இல்லாத இடத்தில் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ் நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
தென் தமிழகத்து மக்களின் எதிர்ப்பை மீறி கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தில் கலைஞர் நூலகம் அமைக்கப்படுமேயானால், விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டத்தில் குதிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.