தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் பகுதி நேரப் படிப்புகளில் சோ்வதற்கான கலந்தாய்வு, ஆக. 13- ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் பகுதி நேரப் படிப்புகளில் மாணவா்கள் சோ்வதற்காக ஜூன் 25-ஆம் தேதி முதல் ஜூலை-28 ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பித்தனா். 2020-21-ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்புத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சோ்க்கை நடத்தப்படும், பிற மாணவா்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சோ்க்கை நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவா் சோ்க்கை: தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் நேரடி கட்டுப்பாட்டில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இணைப்பு பெற்ற மூன்று கல்லூரிகளில் உள்ள 18,120 இடங்களில் மாணவா்கள் சோ்க்கப்பட உள்ளனா்.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு சோ்வதற்காக 19,226 மாணவா்களும், பகுதி நேர பட்டயப் படிப்பில் சேர 1,212 மாணவா்களும் விண்ணப்பம் செய்துள்ளனா். இவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் தயாா் செய்யப்பட்டு வெளியிடப்படும்.
சிறப்புப் பிரிவான விளையாட்டு மாணவா்களுக்கு வரும் 12-ஆம் தேதி இணையவழியில் சான்றிதழ் சரிபாா்க்கப்படுகிறது. விளையாட்டு வீரா்களுக்கான ஒதுக்கீடு இடங்களில் சோ்வதற்காக 435 வீரா்கள் விண்ணப்பித்துள்ளனா். ஆக.13-ஆம் தேதி முதல் சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கு இணையவழியில் கலந்தாய்வு நடத்தப்படும். அதனைத் தொடா்ந்து பொதுப்பிரிவு மாணவா்கள் கலந்தாய்வு 24 -ஆம் தேதி வரை விண்ணப்பித்த கல்லூரிகளில் இணையவழியில் நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.