சென்னை: சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சக்தி மசாலா இயக்குநர் டாக்டர் சாந்திதுரைசாமிக்கு ஔவையாா் விருது வழங்கினார்.
தமிழகத்தில் சமூகச் சீர்த்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஔவையாா் விருது வழங்கப்படுகிறது.
நடப்பாண்டுக்கான விருது, ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்களின் இயக்குநரும், சக்தி தேவி அறக்கட்டளையின் அறங்காவலருமான டாக்டர் சாந்திதுரைசாமிக்கு கிடைத்துள்ளது. டாக்டர். சாந்திதுரைசாமி, கடந்த 44 ஆண்டுகளாக சக்தி மசாலா சமையல் பொடிகள் தயாரிக்கும் நிறுவனத்தை, கணவர் டாக்டர் பி.சி.துரைசாமியுடன் இணைந்து நடத்தி வருகிறார்.
கடந்த 1977 இல் தொடக்கப்பட்ட நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்ட கிராமப்புற ஏழை மக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். சக்திதேவி சாரிட்டபிள் டிரஸ்ட், சக்தி மறுவாழ்வு மையம், சக்தி மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி மற்றும் சக்தி ஆட்டிசம் சிறப்புப் பள்ளி ஆகியவற்றை தமிழக அரசு அனுமதி பெற்று நடத்தி வருகிறார்.
மேலும், 15-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் சக்தி மருத்துவமனையில் 10 சிறப்பு மருத்துவர்களை கொண்டு மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. மருந்து மாத்திரைகள் குறைந்த விலையிலும், ஆய்வக பரிசோதனைகள் சலுகைக் கட்டணத்திலும் வழங்கப்படுகிறது.
வழிக்காட்டி திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் ஆறு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முழுமையான நூலகங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மாணவ, மாணவியருக்கு கோடை கால பயிற்சிகள், ஆளுமைப் பண்பு வளர்க்கும் வகுப்புகள் நடத்தப்படுகிறது. 41 அரசு பள்ளிகள் தத்தெடுக்கப்பட்டு அங்கு பயிலும் 12000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் நலனுக்காக அப்பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள், கழிவறைகள், காம்பவுண்ட் சுவர்கள், குடிநீர் வசதிகள், விளையாட்டு உபகரணங்களை வழங்கி பள்ளிகளின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கு உதவுகிறது. சிறந்த மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை, மேற்படிப்புக்கு பண உதவி என்று கடந்த 21 ஆண்டுகளாக ஆண்டுதோறும் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு உதவி செய்து உள்ளது.
தளிர் திட்டத்தில் இலவச மரக்கன்று வழங்குவதுடன், மரம் வளர்போருக்கு 21 ஆண்டுகளாக தொடர்ந்து ஆண்டுதோறும் விருதுகளும் வழங்கப்படுகிறது. மனிதநேயம் மிக்க சேவைகளுக்காக பல்வேறு தேசிய மாநில விருதுகள் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்து உள்ளது. இவ்வாறான சமூக சேவைகளுக்காக சக்தி மசாலா நிறுவன இயங்குநர் டாக்டர் சாந்திதுரைசாமிக்கு, ஔவையாா் விருது அறிவிக்கப்பட்டது.
சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டாக்டர் சாந்திதுரைசாமிக்கு ஔவையாா் விருது வழங்கினார். விழாவில், டாக்டர் பி.சி.துரைசாமி கலந்து கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.