சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் அருகே திமுக பேச்சாளர் வெட்டிக் கொலை
சென்னை அண்ணா நகர் காவல் நிலையம் அருகே புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற
சென்னை அண்ணா நகர் காவல் நிலையம் அருகே புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. தகவல் அறிந்து அங்கு வந்த அண்ணா நகர் போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில், கீழ்ப்பாக்கம் அடுத்த டி.பி.சத்திரம் 16-வது குறுக்கு தெருவை சேர்ந்த சம்பத்குமார் (48) என்பதும், அவர் திமுக பேச்சாளர் என்பதும் தெரியவந்தது. போலீஸ் இன்பார்மராக இருந்து வந்துள்ளார் சம்பத்குமார்.
கடந்த சில நாள்களுக்கு முன் தான் வசிக்கும் பகுதியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி பதுங்கி இருப்பதை போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், ரவுடியை போலீசார் கைது செய்ததால் இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் ரவுடியால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக டிபி சத்திரம் காவல் நிலையத்தில் சம்பத்குமார் புகார் கொடுத்துள்ளார். ஆனால், அந்த புகார் தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது சம்பத்குமார் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் துறைரீதியிலான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சம்பத்குமார் கொலை தொடர்பாக கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிகுமார், டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், மோகனவேல், ஷெனாய்நகரைச் சேர்ந்த நவீன்குமார் ஆகியோர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். 4 பேரையும் கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
காவல் நிலையம் அருகே திமுக பேச்சாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.