முகப்பு
தமிழ்நாடு

திருச்சியில் 24 மணி நேரமும் தடுப்பூசி  வசதி: ஆக.27-ல் தொடக்கம்

திருச்சி மாநகரில் இரவு, பகல் என எந்நேரமும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வசதி ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. 

Updated On : 25 ஆகஸ்ட், 2021 at 8:36 PM
திருச்சியில் 24 மணி நேரமும் தடுப்பூசி  வசதி: ஆக.27-ல் தொடக்கம்
பகிர்:


திருச்சி: திருச்சி மாநகரில் இரவு பகல் எந்நேரமும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வசதி ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. 

மூன்றாவது அலை கரோனா குறித்த தகவல்கள் பரவி வரும் நிலையில், தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றது. எனவே விதிமுறைகளுடன் பொது இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கரோனா பரிசோதனைகள், வீடுகள் தோறும் சென்று சோதனைகள் மேற்கொள்வது,  தடுப்பூசி செலுத்துதல், சமூக இடைவெளி மற்றும் முக கவசங்களை அணிய வலியுறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

கரோனா தடுப்பூசிகள் பாரபட்சமின்றி அனைத்து பகுதிகளிலும் செலுத்தப்பட்டு வருகின்றது. ஆங்காங்கே சிறப்பு முகாம்களும் நடத்தி தடுபூசிகள் செலுத்தப்படுகின்றன.

இந்நிலையில், இரவு பகல் எந்நேரமும்  கரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ளும் நடைமுறை திருச்சி மாநகரில் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. 

முதல் கட்டமாக, திருச்சி மாநகரில் இயங்கி வரும் 4  நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில்  சிறப்பு முகாம்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

அந்த வகையில் உறையூர்,  தெப்பக்குளம், சுப்பிரமணியபுரம், காட்டூர் பகுதிகளில் இயங்கி வரும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு பகல் 24 மணி நேரமும் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

இதில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் இருப்புக்கு ஏற்ற வகையில் செலுத்தப்படவுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. 

நாளடைவில், மக்கள் அளிக்கும் ஒத்துழைப்பு மற்றும் வரவேற்புக்கு ஏற்ற வகையில் மேலும் பல இடங்களிலும் விரிவு படுத்தவும் வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.