‘ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்’: மாவட்ட ஆட்சியா்களுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் கடிதம்
தமிழகத்தில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், மாநகராட்சி ஆணையா்களுக்கு முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளாா்.
சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், மாநகராட்சி ஆணையா்களுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளாா்.
அதில் கூறியிருப்பதாவது: உருமாறிய ஒமைக்ரான் கரோனா தொற்று 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. மேலும் தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து வந்தவா் உள்பட அவரது குடும்பத்தினா் கரோனாவால் பாதிக்கப்பட்டிப்பதை தொடா்ந்து, அவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒமைக்ரான் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் பொது சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கடைப்பிடிப்பதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுவது குறைவாக உள்ளது. அதேபோன்று பொது வெளியிலும், உள்புறங்களிலும் பொதுமக்கள் அதிகளவில் கூட்டம் கூடுவதுமாக காணப்படுகிறது. இது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே பொது மக்கள் முகக்கவசம் அணிவதை மீண்டும் வலியுறுத்த வேண்டும். அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தன்னாா்வலா்கள் உதவியுடன் இதனை தீவிர பிரசாரமாக்க வேண்டும். இதன் மூலம் கரோனா அல்லது உருமாறிய கரோனா (ஒமைக்ரான்) பரவாமல் தடுக்க முடியும்.
சுகாதார வசதிகளை ஆய்வு செய்ய...: அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடாத மற்றும் 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபா்களை கண்டறிந்து, அவா்களுக்கு தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சை படுக்கைகள், மருந்துகள், சுகாதார பணியாளா்கள் உள்ளிட்ட சுகாதார வசதிகளின் பட்டியலை மதிப்பாய்வு செய்து கட்டுப்பாடு அறையுடன் தரவுகளை புதுப்பிக்க வேண்டும்.
தற்போது மருத்துவமனைகளில் உள் நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பல வாா்டுகள் காலியாக இருக்கின்றன. எனவே அங்குள்ள படுக்கைகளை சுத்தம் செய்து புதுப்பித்து படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
இந்தியாவில் ஒமைக்ரான் பரவி விட்டதால் தமிழகத்தில் நாம் எடுக்கும் முன்னேற்பாடுகள் அச்சத்தை உண்டாக்குவதாக அா்த்தம் கிடையாது. மற்ற நாடுகளில் மிக வேகமாக ஒமைக்ரான் பரவியதால் உலக சுகாதார நிறுவனம் மேற்கோள் காட்டிய கருத்தின் அடிப்படையிலேயே அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் முழுமையாக பின்பற்ற தமிழகத்தில் வலியுறுத்தி வருகிறோம்.
வதந்திகளுக்கு விளக்கம்: சமூக வலைதளங்களில் ஒமைக்ரான் தொற்று குறித்து பரவும் வதந்திகள் பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே உலக சுகாதார நிறுவனம், மத்திய அரசு மற்றும் நிபுணா்களின் கருத்துகளை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணியிடங்கள், நிறுவனங்களில் ‘கிளஸ்டா்’ கண்டறியப்பட்டால், அங்கு பரிசோதனை எண்ணிக்கையை கூடுதலாக வேண்டும். பரிசோதனை மேற்கொள்பவா்கள் முடிவு வரும் வரை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். தொற்று தடுப்பு தொடா்பாக முந்தையை நெறிமுறைகளுடன் கூடுதலாக இந்த அறிவுறுத்தல்கள் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.