முகப்பு
தமிழ்நாடு

வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு: திரளானோர் பங்கேற்பு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை இரவு  நடைபெற்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு
பகிர்:

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை இரவு  நடைபெற்றன.

கீழை நாடுகளின் லூர்து எனப் போற்றப்படுகிறது நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம்.  பசலிக்கா அந்தஸ்து பெற்ற இப்பேராலயத்தில்  கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் விண்மீன் ஆலயம் அருகே உள்ள புனித சவேரியார் திடலில், கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றன. மறையுரை, கூட்டுத் திருப்பலியுடன் சிறப்பு வழிபாடுகள் தொடங்கப்பட்டன. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய அதிபர் சி. இருதயராஜ் அடிகளார், பேராலய துணை அதிபர் அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன் மற்றும் உதவி பங்குத் தந்தையர்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

திருப்பலியின் நிறைவில், தேவதைகள் போல உடையணிந்திருந்த சிறுமிகள் கொண்டு வந்து அளித்த குழந்தை இயேசுவின் திருச்சொரூபத்தை, பேராலய துணை அதிபர் அற்புதராஜ்  பெற்றுக் கொண்டு, இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில், 11.45 மணிக்கு குழந்தை இயேசு சொரூபத்தை பக்தர்களுக்குக் காட்சிப்படுத்தி, கிறிஸ்துமஸ் குடிலில் வைத்து வழிபாடுகள் மேற்கொண்டார்.

அப்போது, வழிபாட்டில் பங்கேற்றிருந்த பக்தர்கள் இறைப் புகழ்ச்சி வசனங்களுடன் வழிபாடு மேற்கொண்டனர்.  

பின்னர், பேராலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வாழ்த்துச் செய்தி அறிவிக்கப்பட்டது. பக்தர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய வளாகம், புனித சேவியர் திடலில் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றவர்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பேராலய கீழ்க்கோயில்,  விண்மீன் ஆலயம், பேராலய வளாகம் என அனைத்துப் பகுதிகளும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.  பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த திரளான பக்தர்கள் வழிபாடுகளில் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →