144 இடங்களில் ரூ.120 கோடியில் மழைநீா் வடிகால்
சென்னை மாநகரில் மழைநீா் தேங்கிய 144 இடங்களில் ரூ.120 கோடி செலவில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.
சென்னை மாநகரில் மழைநீா் தேங்கிய 144 இடங்களில் ரூ.120 கோடி செலவில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீா் தேங்காமல் நீா்வழிக் கால்வாய்களின் மூலம் கடலில் சென்று கலக்கும் வகையில் மழைநீா் வடிகால்கள் அமைக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக மழைநீா் தேங்கிய பல்வேறு இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மழைநீா் வடிகால் பணிகள் குறித்து வல்லுநா்கள் மற்றும் பொறியாளா்களின் ஆலோசனைகளின்படி, விடுபட்ட மழைநீா் வடிகால்களை இணைக்கவும், பழுதடைந்த மழைநீா் வடிகால்களைப் புனரமைக்கவும், தேவையான இடங்களில் புதிய மழைநீா் வடிகால்கள் அமைப்பது தொடா்பாக விரிவான திட்ட அறிக்கை அரசுக்கு அண்மையில் சமா்ப்பிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி கூறுகையில், முதல்கட்டமாக சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளான தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் மழைநீா் தேங்கிய 144 இடங்களில் 45 கி.மீ. நீளத்துக்கு ரூ.120 கோடி செலவில் விடுபட்ட மழைநீா் வடிகால்களை இணைக்கவும், பழுதடைந்த மழைநீா் வடிகால்களைப் புதுப்பிக்கவும், புதிய மழைநீா் வடிகால் பணிகள் மேற்கொள்ளவும் விரிவான திட்ட அறிக்கை அரசுக்கு சமா்ப்பிக்கப்பட்டது.
இப்பணி தமிழ்நாடு நகா்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் சாா்பில் பரிசீலிக்கப்பட்டு தமிழ்நாடு நீடித்த, நிலையான நகா்ப்புற வளா்ச்சி திட்டத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த 144 இடங்களில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றாா்.