முகப்பு
தமிழ்நாடு

புதுவையில் 2 பேருக்கு ஒமைக்ரான் உறுதி

புதுவையில் கரோனா தொற்று உறுதியான இருவருக்கு ஒமைக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
கோப்புப்படம்
பகிர்:

புதுவையில் கரோனா தொற்று உறுதியான இருவருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் உருமாறிய கரோனா, ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸாக பரவி வருகிறது. அதிவேகமாக ஒமைக்ரான் பரவக்கூடியது என்பதால் பல நாடுகளில் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஒமைக்ரான் பரவலைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் புதுவையில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவை லாஸ்பேட்டையைச் சேர்ந்த 20 வயது பெண், உருளையன்பேட்டையைச் சேர்ந்த 80 வயது முதியவருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றனர்.

கடந்த 7-ம் தேதி இவர்களின் மாதிரிகள் பெங்களூருவுக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இருவருக்கும் உருமாறிய ஒமைக்ரான் தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இருவரும் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். 

இவர்கள் மூலம் அதன்  பரவல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அவர்களையும் தனிமைப்படுத்தி, பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு கூறுகையில், புதுவையில் இதுவரை 90 பேரின் மாதிரிகள் சந்தேகத்தின் பேரில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 வயது பெண், 80 வயது முதியவருக்கு தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து புதுவையில் தொற்று ஏதேனும் உள்ளதா என்பது தொடர்பாக ஆய்வு செய்யவும், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிருவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்பதால் மேலும் ஏதேனும் தொற்று பரவலுக்கு தொடர்பு உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →