தமிழ்நாடு

ஆணவக் கொலைகளைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?: நீதிமன்றம்

DIN

தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி அடங்கிய சிறப்பு பிரிவை தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தனிப்பிரிவை தொடங்க உத்தரவிடக் கோரி துளிர் அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர்  வித்யாரெட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியிருந்தால் தமிழகம் ஆணவ கொலைகள் இல்லா மாநிலமாக மாறியிருக்கும். கடந்த ஆண்டு புதுக்கோட்டையைச் சேர்ந்த  காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி, கோவை செல்லும் வழியில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, பெண்ணின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதன் பின் அந்த பெண் மர்மமான முறையில் மரணமடைந்தார். இது ஆணவ கொலையாக இருக்கலாம் என்ற  சந்தேகம் எழுகிறது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு  தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆணவக் கொலைகளைத் தடுக்க  உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், இந்த மனுவுக்கு  தமிழக உள்துறைச் செயலாளர், காவல்துறை டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT