முகப்பு
தமிழ்நாடு

ஈரோட்டில் 7 ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்; பெண் மருத்துவர்கள் பங்கேற்பு

இந்திய மருத்துவ சங்கத்தினர் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே உள்ள காலி இடத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2021 at 3:26 PM
ஈரோட்டில் 7 ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்; பெண் மருத்துவர்கள் பங்கேற்பு
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:58 AM

ஈரோடு: ஆயுர்வேத மருத்துவர்கள் 58 வகையான அறுவை சிகிச்சையைச் செய்யலாம் என்ற மத்திய அரசின் முடிவை கண்டித்தும் அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் நாடு தழுவிய அளவில் இந்திய மருத்துவ சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலும் இந்திய மருத்துவ சங்கத்தினர் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே உள்ள காலி இடத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

அதன்படி இன்று 7 ஆவது நாளாக மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நீடித்து வருகிறது. இன்று இந்திய மருத்துவச் சங்கத்தின் மகளிர் அணி சார்பில் ஏராளமான பெண் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிக அளவில் பங்கேற்றனர். இந்திய மருத்துவச் சங்கத்தின் மகளிர் அணி மாநிலத் தலைவி சித்ரா தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

Advertisement

இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் சி.என். ராஜா கலந்து கொண்டு பேசினார். மகளிர் அணி மாவட்டப் பொறுப்பாளர்கள் டாக்டர் நான்சி, டாக்டர் பூர்ணிமா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்திய மருத்துவ சங்கத்தின் மாவட்ட கிளைத் தலைவர் பிரசாத், மாநில துணைத் தலைவர் மல்லிகா, மாவட்டச் செயலாளர் செந்தில்வேல், முன்னாள் மாவட்டத் தலைவர் சுகுமார், விஜயகுமார் உள்பட நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன் கூறும் போது, ஆயுர்வேத மருத்துவர்கள் 58 வகையான அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் முடிவைக் கண்டித்து இந்த சங்கத்தின் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று 7 ஆவது நாளாக இந்தப் போராட்டம் நீடித்து வருகிறது. வரும் 14 ஆம் தேதி வரை இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். அதன்பிறகு எங்கள் சங்கத்தின் உயர்மட்டக் குழு கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யும். இந்தியா முழுவதும் 50 இடங்களில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 8 இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.