பவானி: அந்தியூர் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அத்தாணியில் ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் 35-வது கிளை புதன்கிழமை திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா தலைமை வகித்தார். அந்தியூர் சட்டப் பேரவை உறுப்பினர் இ.எம்.ஆர்.ராஜா(எ) கே.ஆர். ராஜா கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வங்கி கிளையைத் திறந்து வைத்தார்.
மேலும், அத்தாணி கிளையில் 69 பயனாளிகளுக்கு ரூ. 61.11 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கிய அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:
விவசாயிகள், நெசவாளர்கள் நலனுக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் சிறப்பான திட்டங்கள் உள்ளன.
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகை ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 34 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது வங்கியின் 35-வது கிளையாக அத்தாணி கிளையில் அந்தியூர் வட்டத்தில் அத்தாணி, குப்பாண்டம்பாளையம், கொண்டையம்பாளையம், கீழ்வாணி, மேவானி, சவண்டப்பூர் ஆகிய 6 கிராம மக்கள் பயன்பெறும் வகையிலும், 6 தொடக்க கூட்டுறவுச் சங்கங்கள், 2 நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள், 15 பால் கூட்டுறவுச் சங்கங்கள் பயன் பெறும்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், கோபி கோட்டாட்சியர் ஜெயராமன், மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் என்.வில்வசேகர், பொது மேலாளர் ஆர்.ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர்கள் எஸ்.பார்த்திபன் (ஈரோடு மண்டலம்), டி.பிரபு (திருப்பூர் மண்டலம்), அந்தியூர் வட்டாட்சியர் வீரலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.