முகப்பு
தமிழ்நாடு

பொதுவழி ஆக்கிரமிப்பு: ரங்கநாதபுரம் மக்கள் போராட்டம்

பொதுவழியை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதை அகற்றக் கோரி ஆதார், குடும்ப அட்டை, சமையல் பாத்திரங்களுடன் குடும்பத்துடன் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரங்கநாதபுரம் கிராம மக்கள்
பகிர்:

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்பாட்டில்  உள்ள பொதுவழியை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதை அகற்றக் கோரி ஆதார், குடும்ப அட்டை, சமையல் பாத்திரங்களுடன் குடும்பத்துடன் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமையில், ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது அரக்கோணம் வட்டம்,பொய்கைபாக்கம் மதுரா ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவராமன் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோர் தாங்கள் குடும்பத்தினருடன் திரண்டு வந்து,  ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண அட்டை, நில ஆவணங்கள், அரசுக்கு அளித்துள்ள மனுக்கள், அந்த மனுக்களுக்கு அரசுத் தரப்பில் அளித்துள்ள பதில் நகல்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர், சமையல் பாத்திரங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை மனுவுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களின் மனுவில் தெரிவித்திருப்பதாவது:

அரக்கோணம் வட்டம், பொய்கைபாக்கம் அடுத்த ரங்கநாதபுரம் கிராமத்தில் சர்வே எண் 249 - ல் உள்ள பொது வழியை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்திக்கொள்ள ஊராட்சி அனுமதி பெற்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக அந்த பொது வழியை ஆக்கிரமித்து தடுப்புச் சுவர் எழுப்பி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து கடந்த 2013ல் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர்,  வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் மனு அளித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும், பொதுவழி ஆக்கிரமிப்பை அகற்ற இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், அந்த வழியை பயன்படுத்தும்  10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறோம்.

இதுவரை தங்களுக்கு நியாயம் கிடைக்காததாலும்,பொது வழியை ஆக்கிரமித்துள்ள தனிநபரின் தொல்லையால் அங்கு வாழ வழியில்லாமல் எங்களுடைய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவைகளை ஆட்சியரிடம் ஒப்படைத்து ஆட்சியர் அலுவலகத்திலேயே தஞ்சமடைய முடிவு செய்து குடும்பத்தினருடன் வந்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறி்த்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அரக்கோணம் வட்டாட்சியர் கணேசன் உள்ளிட்டோர் அவர்களிடம் போச்சுவார்த்தை நடத்தி, நாளை நேரில் வந்து ஆக்கிரமிப்பை அகற்றுவதாக உறுதியளித்ததன்பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.